வெளியிடப்பட்ட நேரம்: 22:10 (12/06/2018)

கடைசி தொடர்பு:22:10 (12/06/2018)

கதவணை கட்டக்கோரி கொள்ளிடம் ஆற்றில் செங்கல்லுடன் இறங்கி விவசாயிகள் போராட்டம்!

கதவணை கட்டும் பணிகளை தொடங்க வேண்டும் என்று கொள்ளிடம் கீழணை விவசாயிகள் சங்கம் சார்பில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ம.ஆதனூர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி இன்று சங்கத்தின் தலைவர் விநாயகமூர்த்தி தலைமையில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் செங்கல்லுடன் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ம.ஆதனூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டக்கோரி செங்கல்லுடன் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் போராட்டம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014 -ம் ஆண்டு சட்டமன்றத்தில் விதி 110 -ன் கீழ் கொள்ளிடம் ஆற்றிலிருந்த கடலில் கலக்கும் நீரை தேக்குவதற்காக கடலூர் மாவட்டம்  ம.ஆதனூருக்கும் நாகை மாவட்டம் குமாரமங்களத்துக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டப்படும் என அறிவித்து அதற்காக ரூ.410 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகத் தெரிவித்தார். இந்நிலையில் 4 ஆண்டுகளை 
கடந்த பின்பும் அதற்கான எந்தப் பணிகளுமே மேற்கொள்ளப்படாமல் கதவணை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து உடனே கதவணை கட்டும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று கொள்ளிடம் கீழணை விவசாயிகள் சங்கம் சார்பில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ம.ஆதனூர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி இன்று சங்கத்தின் தலைவர் விநாயகமூர்த்தி தலைமையில் விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கத்தினர் செங்கல்லுடன் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில் பிச்சாவரம் கண்ணன், ஆதனூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சோமசுந்தரம் மற்றும் பெண்கள், விவசாயிகள் உட்பட சுமார் 200 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கதவணை கட்ட வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டம் குறித்து கொள்ளிடம், கீழணை பாசன விவசாயச் சங்கத்தலைவர் விநாயகமூர்த்தி கூறுகையில் ``தென் மேற்குப் பருவ மழையால் கிடைக்கும் நீர் பாலாறு தென்பெண்ணை வழியாக வீணாகக் கடலில் கலக்கிறது. வட கிழக்குப் பருவமழையால் கிடைக்கும் உபரி நீர் வருடத்துக்குச் சுமார் 30 டிஎம்சியிலிருந்து 50 டிஎம்சி வரை கொள்ளிடம் வழியாகக் கடலில் கலக்கிறது என்றார். எனவே, விவசாயிகளின் நலன் கருதி மழைக்காலத்தில் வீணாகும் தண்ணீரைத் தேக்க தமிழக அரசு கதவணை கட்டும் பணிகளை உடனே தொடங்கிட வேண்டும்" என்றார்.