வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (12/06/2018)

கடைசி தொடர்பு:21:20 (12/06/2018)

பள்ளப்பட்டி இஸ்லாமிய ஓட்டுகளுக்குக் குறிவைக்கும் அ.ம.மு.க மற்றும் தி.மு.க!

பள்ளப்பட்டி இஸ்லாமிய ஓட்டுகளுக்குக் குறிவைக்கும் அ.ம.மு.க மற்றும் தி.மு.க!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலின் வெற்றி தோல்வியை ஒவ்வொரு தேர்தலிலும் நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கிறது அந்தத் தொகுதியில் வரும் பள்ளப்பட்டியில் உள்ள 25 ஆயிரம் இஸ்லாமியர்களின் ஓட்டுகள். அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விரும்புவோர் எந்தக் கட்சியாக இருந்தாலும், முதலில் பள்ளப்பட்டி இஸ்லாமியர்களின் ஓட்டுகளை `கவர்' செய்வதில்தான் மும்முரம் காட்டுவார்கள். காரணம், பள்ளப்பட்டி இஸ்லாமியர்கள் கட்சி பாகுபாடின்றி அத்தனை ஓட்டுகளையும் யாரோ ஒருவருக்கு வழங்கி, அந்த நபரை அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றிபெற வைத்துவிடுவார்கள் என்பதால்தான். அப்படிப்பட்ட பள்ளப்பட்டி இஸ்லாமியர்களின் ஓட்டுகளை தங்கள் பக்கம் இழுக்க, அந்தத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வான செந்தில்பாலாஜியும், அவரை எதிர்த்து நின்று கடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவியவருமான தி.மு.க-வைச் சேர்ந்த கே.சி.பழனிசாமியும் இப்போதே களத்தில் குதித்திருக்கிறார்கள்.

இஸ்லாமிய நோன்பு

ஆம்...பள்ளப்பட்டியில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனை அழைத்து வந்து படுபிரமாண்டமாக நடத்தினார் செந்தில்பாலாஜி. நூற்றுக்கும் மேற்பட்ட குக்கர்கள், தையல் மெஷின்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கி, `உங்கள் ஓட்டுகள் முழுவதும் எங்களுக்கே' என்று உறுதி பெற்றுச் சென்றுள்ளார் டி.டி.வி. தினகரன். தி.மு.க. சார்பில் பள்ளப்பட்டி நகரச் செயலாளர் தோட்டம் பஷீர் ஏற்பாடு செய்த இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் கே.சி.பி. கலந்துகொண்டு, `இஸ்லாமியர்களே, வரும் தேர்தலில் எங்கள் பக்கம் தயவு காட்டுங்கள்' என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

இதுபற்றி விசாரித்தோம். நம்மிடம் பேசிய அரவக்குறிச்சி தொகுதி நிலவரத்தை தங்கள் கண் அசைவில் வைத்திருக்கும் புள்ளிகள் சிலர், ``கரூர் மாவட்டத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி என நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கு. இவற்றில் அரவக்குறிச்சி தவிர்த்து, மற்ற மூன்று தொகுதிகளைப் பொறுத்தமட்டில், அந்த நேரத்தில் எந்தக் கட்சிக்கு அலை ஏற்படுகிறதோ, எந்தக் கட்சிக்குச் செல்வாக்கு இருக்கிறதோ, அந்தக் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரே ஜெயிப்பார். அரவக்குறிச்சி தொகுதியைப்  பொறுத்தமட்டில், பள்ளப்பட்டி இஸ்லாமிய மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ, அவர்களே வெற்றிபெற முடியும் என்கிற நிலை. அதற்காகத்தான், இந்த மக்களின் ஓட்டுகளை தங்கள்வசமாக்க செந்தில்பாலாஜியும், தி.மு.க-வின் கே.சி.பியும் இப்போதே காய்நகர்த்தத் தொடங்கியிருக்கிறார்கள்" என்று முன்னுரை கொடுத்தார்கள்.

மேலும் அவர்கள், ``செந்தில்பாலாஜியோ அரவக்குறிச்சி தொகுதியைத் தக்க வச்சுக்கணும்னு திட்டமிட்டுச் செயல்படுகிறார். தி.மு.க-வின் கே.சி.பி-யைப் பொறுத்தமட்டில், தன்னால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டு, தன்னை எதிர்த்து அரசியல் பண்ணி பெரிய ஆளான செந்தில்பாலாஜி, கடந்த தேர்தலில் தன்னை மண்ணைக் கவ்வ வைத்ததற்கு வரும் தேர்தலில் பழிதீர்க்கவே பள்ளப்பட்டி இஸ்லாமியர்கள் மீது கரிசனம் காட்டத் தொடங்கியிருக்கிறார். தி.மு.க-விலிருந்து வைகோ வெளியேறி ம.தி.மு.க-வைத் தொடங்கியபோது, அவர் பின்னே சென்றவர் கே.சி.பழனிசாமி. அப்போது, கே.சி.பி-யுடன் ஒட்டிக்கொண்டு அரசியல் படித்தவர்தான் செந்தில் பாலாஜி. அதன்பிறகு கே.சி.பி. தி.மு.கவுக்குத் திரும்ப, அவரோடு தி.மு.க-வில் இணைந்தார் செந்தில் பாலாஜி. அவரை வைத்து வளர்ந்தவர், 2001- ம் ஆண்டு அப்போதைய அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஷாகுல் ஹமீது மூலம் அ.தி.மு.க-வுக்குத் தாவினார் செந்தில்பாலாஜி. 2006-இல் கரூரில் சீட் வாங்கி ஜெயித்தாலும், ஜெயலலிதாவுக்கு அறிமுகம் இல்லாதவராகத்தான் இருந்தார் அவர். ஆனால், அப்போது கரூர் எம்.பி-யாக இருந்த கே.சி.பி-யை எதிர்த்து, போராட்டம் செய்து இவரே செயற்கையாகக் காவல்துறையை அடிப்பதுபோல் கலவரத்தை ஏற்படுத்தி, ஏகப்பட்ட நாடகமாடி, ஜெயலலிதாவின் பார்வைக்குச் சென்று, 2001-இல் போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயிலுக்குப் போனபோது அடுத்த முதல்வர் என்று பேசப்படும் அளவுக்கு உயர்ந்தார்.

இஸ்லாமியர்கள்

இதுவல்ல விஷயம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் செந்தில்பாலாஜிக்குச் சீட் கிடைத்தது. தி.மு.க சார்பில் கே.சி.பி-க்குச் சீட் கொடுத்தார் ஸ்டாலின். `தன்னால் வளர்க்கப்பட்ட செந்தில் பாலாஜியிடம் தோற்றால் கேவலம்' என்ற பயத்தில், `சீட் வேண்டாம்' என்றார் கே.சி.பி. என்றாலும், அவரை வற்புறுத்தியே அந்தத் தொகுதியில் நிற்க வைத்தார் ஸ்டாலின். பணப்பட்டுவாடா பிரச்னையில் அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் நடத்தப்பட்டது. கே.சி.பி. பயந்த மாதிரியே, செந்தில்பாலாஜியிடம் தோற்க நேர்ந்தது. கடந்த 2004- ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கரூரில் நின்று ஜெயித்தபோதும், 2011-இல் அரவக்குறிச்சி தொகுதியில் எம்.எல்.ஏ-வானதற்கும் பள்ளப்பட்டி இஸ்லாமியர்களின் ஓட்டுகளே கே.சி.பி-க்குக் கைகொடுத்தன. ஆனால், 2016- ம் சட்டமன்றத் தேர்தலில் பள்ளப்பட்டி இஸ்லாமியர்களின் ஓட்டுகளை செந்தில்பாலாஜி அறுவடை செய்து ஜெயித்துவிட்டார். கே.சி.பி-யோ பள்ளப்பட்டி இஸ்லாமியர்களுக்கு தர்கா கட்ட, இன்னும் பல பொதுக்காரியங்களுக்கு என்று தனது சொந்தப் பணத்தையே பலகோடி கொடுத்திருக்கிறார். அதனால், சட்டமன்றத் தேர்தலில் தோற்றதைவிடவும், இஸ்லாமியர்களின் ஓட்டுகளை இழந்து தோற்றதைத்தான் தன்னுடைய கௌரவப் பிரச்னையாக நினைக்கிறார் கே.சி.பி. அதனால்தான், செந்தில் பாலாஜியிடம் தோற்றதை அவமானமாக நினைக்கும் கே.சி.பி., வரும் எம்.பி தேர்தலிலோ அல்லது சட்டமன்றத் தேர்தலிலோ நின்று ஜெயிப்பதோடு, பள்ளப்பட்டி இஸ்லாமியர்களின் ஓட்டுகள் அனைத்தையும் சிந்தாமல் சிதறாமல் பழையபடி தனக்குக் கிடைக்கவைத்துக் காட்டுவதை சபதமாகப் போட்டு களத்தில் இறங்கியிருக்கிறார். செந்தில் பாலாஜியோ, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அரவக்குறிச்சி தொகுதியிலேயே நிற்க நினைக்கிறார். அதற்காகவே பள்ளப்பட்டிக்கு டி.டி.வி.தினகரனை அழைத்து வந்து பிரமாண்டமான நிகழ்ச்சியாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார்.

 

கிட்டத்தட்ட எல்லா மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளையும் அழைத்து வந்ததோடு, தினகரன் கையால் பல லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க வைத்தார் செந்தில்பாலாஜி. நூற்றுக்கும் மேற்பட்ட குக்கர்கள், தையல் மெஷின்கள் என்று நலத்திட்ட உதவிகளை வழங்க வைத்தார். குக்கர் சின்னத்தை இஸ்லாமியர்கள் மத்தியில் பிரபலப்படுத்த, எங்கு பார்த்தாலும் குக்கர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதோடு, இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை மிகவும் தடபுடலாக நடத்திக்காட்டினார். `இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம்' என்று பேசி, தினகரனும் இஸ்லாமியர்களைக் குளிர்வித்தார். இதையறிந்த கே.சி.பி, தி.மு.க. மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனை பிடிபிடியெனப் பிடித்திருக்கிறார். அவர், பள்ளப்பட்டி நகரச் செயலாளர் தோட்டம் பஷீருக்கு அழுத்தம் கொடுக்க, அவர் அவசரம் அவசரமாக தி.மு.க. சார்பில் இஃப்தார் நோன்பு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனோடு கலந்துகொண்டார் கே,சி.பி. 

தி.மு.கவினர் சிலர், `செந்தில் பாலாஜி நடத்திய இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அளவுக்கு இங்கே கூட்டம் வரவில்லை' என்று கே.சி.பி-யிடம் வத்தி வைத்தார்கள். உடனே கடுகடுத்த அவர், `இது எனது கௌரவப் பிரச்னை. பள்ளப்பட்டி இஸ்லாமியர்கள் கே.சி.பி. பக்கம்தான் என்ற நிலையை எப்படியாவது கொண்டு வரணும்' என்று நிர்வாகிகளிடம் சத்தம் போட்டதோடு, `இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்துகள்' என்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டு, இறுக்கமான முகத்தோடு காரில் ஏறிவிட்டார். இப்படி அ.ம.மு.கவும், தி.மு.கவும் பள்ளப்பட்டி இஸ்லாமியர்களின் ஓட்டுகளைப் பெறுவதில் போட்டிபோட்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளன. இதைக் கேள்விப்பட்ட ஆளுங்கட்சி தரப்பும் பள்ளப்பட்டியில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்ய நினைத்தது. ஆனால், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, கரூரில் நிகழ்ச்சியை நடத்தச் சொல்லிட்டார். தான் கரூர் தொகுதியின் எம்.பி-யாக இருப்பதாலும், செந்தில் பாலாஜிக்கு பயந்து நிகழ்ச்சி நடத்துவதுபோல் ஆகிவிடும் என்பதாலும், கரூர் பேருந்து நிலையம் அருகே இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியை நடத்தி முடித்தார் தம்பிதுரை. இப்படி ஆளாளுக்குப் பள்ளப்பட்டி மக்களின் வாக்குகளைக் குறிவைத்தாலும், அந்தப் பகுதி இஸ்லாமியர்கள் யாரை ஆதரிக்கப் போகிறார்கள் என்பதை தேர்தல் நேரத்தில்தான் கண்டறிய முடியும்" என்றார்கள்.

இதுபற்றி,செந்தில்பாலாஜி தரப்பில் பேசினோம். ``கே.சி.பி-யை வைத்தெல்லாம் எங்கள் அண்ணன் அரசியலுக்கு வரலை. கே.சி.பி. கட்சியில் இருந்தப்ப, இவரும் ம.தி.மு.க மற்றும் தி.மு.க-வில் இருந்தார். உண்மையில் பள்ளப்பட்டி இஸ்லாமியர்களின் ஓட்டுகள் அனைத்தும் அண்ணன் செந்தில்பாலாஜி பக்கம்தான் இருக்கின்றன. நாளைக்கே தேர்தல் வந்தால்கூட, அந்த ஓட்டுகளின் உதவியோடு செந்தில் பாலாஜிதான் மீண்டும் வெற்றிபெறுவார். கே.சி.பி தரப்பினரால் பள்ளப்பட்டி இஸ்லாமியர்களின் மனதில் இடம் பிடிக்க முடியாது" என்றார்கள். 

தி.மு.க மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனிடம் பேசினோம்.

``கே.சி.பி அண்ணன் 2004-2009- ம் ஆண்டுகளில் கரூர் எம்.பி-யாக இருந்தார். 2011-16 வரை அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தார். 2004-இல் இருந்து கே.சி.பி அண்ணன் பள்ளப்பட்டியில் இஃப்தார் நோன்புதிறப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்திக்கொண்டுதான் உள்ளார். செந்தில் பாலாஜி தரப்புதான் தற்போது புதிதாக அந்தப் பகுதியில் நிகழ்ச்சி நடத்தியுள்ளது. கே.சி.பி அண்ணனின் செல்வாக்கு கரூரையும் தாண்டியது. செந்தில்பாலாஜி தரப்பினரோ நிலைமையைத் திரித்துக் கூறுகிறது. இது புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக இருக்கிறது. நிகழ்ச்சி தாமதமாக நடந்ததால் கே.சி.பி. பேசவில்லை. அதைவைத்து, `கோபபட்டு கிளம்பினார்'ன்னு சொல்றது சிலர் இட்டுக்கட்டும் கட்டுக்கதைகள்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்