வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (12/06/2018)

கடைசி தொடர்பு:22:30 (12/06/2018)

இணையதளத்தில் வெளியான புதிய திரைப்படம்; மயிலாடுதுறையில் தீவிர விசாரணை

கடந்த மே மாதம் 25 -ம் தேதி தமிழகமெங்கும் காளி ரெங்கசாமி இயக்கிய `ஒரு குப்பைக் கதை' திரைப்படம் ரிலீஸானது. மறுநாளே இணையதளத்தில் இப்படம் வெளியானதால் இப்படக் குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.  

திருட்டு விசிடி

`ஒரு குப்பைக் கதை' திரைப்படத்தின் கதாநாயகனாக தினேஷ், கதாநாயகியாக மனிஷா யாதவ் நடித்துள்ளனர். முகமது அஸ்லாம் தயாரித்துள்ள இப்படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.  தமிழகமெங்கும் 170 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட இப்படம் மயிலாடுதுறை கோமதி திரையரங்கம் மூலம் திருட்டு வி.சி.டி. செய்யப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையறிந்த இணை இயக்குநர் சுலைமான், தயாரிப்பாளர் முகமது அஸ்லாமுக்குத் தெரிவித்தார். உடனே தயாரிப்பாளர் கடலூர் திருட்டு வி.சி.டி. தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையில் இன்று மயிலாடுதுறை கோமதி திரையரங்குக்கு வந்த போலீஸார் இது குறித்து திரையரங்க மேலாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திரையரங்க உரிமையாளர் வெளியூர் சென்றிருப்பதால் அவர் வந்த பிறகு நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்கின்றனர் போலீஸார்.