வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (12/06/2018)

கடைசி தொடர்பு:21:50 (12/06/2018)

`கதருக்குப் பாகிஸ்தான் உரிமை கொண்டாட நேரும்' - எச்சரிக்கிறார் வழக்கறிஞர் சஞ்சை காந்தி!

தமிழகத்தில் இதுவரை 29 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் கிடைத்துள்ளன. மதுரை சுங்குடி சாரி, ஆரணி சில்க், வரிசையில் கதருக்கு புவிசார் குறியீடு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் வழக்கறிஞர் சஞ்சய் காந்தி. 

தமிழகத்தில் இதுவரை 29 பொருள்களுக்குப் புவிசார் குறியீடுகள் கிடைத்துள்ளன. மதுரை சுங்குடி சாரி, ஆரணி சில்க், வரிசையில் கதருக்குப் புவிசார் குறியீடு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் வழக்கறிஞர் சஞ்சய் காந்தி. 

வேளாண், கைத்தறி, கைவினை, உணவு, உள்ளிட்ட பொருள்களுக்குப் புவிசார் குறியீடுகள் கிடைக்கின்றன. அந்தப் பொருள்கள் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே தோன்றக்கூடியதாக, தோற்றுவிக்கக் கூடியதாக இருக்கும். அந்தக் குறிபிட்ட பொருள் அந்தப் பகுதியில் சிறப்புடையதாக இருக்க வேண்டும். உதாரணமாகத் திருப்பதி லட்டு, காஞ்சிபுரம் சில்க் சாரி, சேலம் வெண்பட்டு வேஷ்டி, தஞ்சாவூர் ஓவியம் உள்ளிட்டவை அடங்கும். அந்த வகையான பொருள்களை அடையாளம் கண்டு, அவற்றுக்குச் சட்டப்பாதுகாப்பு பெறும் வழிமுறையே புவிசார் குறியீடு எனப்படும். இந்தியாவில் உள்ள பொருள்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புக்கு இந்தச் சட்டம் வழி வகுக்கிறது. பொருள்களுக்கான புவிசார் குறியீடு சட்டம் கடந்த 1999 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் உற்பத்தியாளர்களுக்கான உரிய அங்கீகாரமும், குறிபிட்ட பொருளுக்கான மதிப்பும் மக்கள் மத்தியில் அதிகரிக்கிறது. சர்வதேச வர்த்தகத்தில் புவிசார் குறியீடுகள் நமக்கான சட்டப் பாதுகாப்பினை உறுதி செய்கிறது. அந்த வகையில் இந்தியாவில் புவிசார் குறியீடுகள் பெற்ற மாநிலங்களில் தமிழகம் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் முக்கிய அடையாளமாகக் கருதப்படும் பொருள்களுக்குப் புவிசார் குறியீடு கிடைப்பதற்காகத் தொடர்ந்து விண்ணப்பித்து வரும் வழக்கறிஞர் சஞ்சை காந்தியிடம் பேசினோம்.

வழக்கறிஞர் சஞ்சய் காந்தி

நம்மிடம் பேசிய அவர், ``பிரசித்த பெற்ற பொருள்களை அடையாளம் கண்டு அவற்றுக்குப் புவிசார் குறீயிடு பெறுவதற்காக தொடர்ந்து விண்ணப்பித்து வருகிறேன். அந்த வகையில் தமிழகத்தைப் பொறுத்தவரை 29 -க்கும் மேற்பட்ட பொருள்களுக்குப் புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ளன. புவிசார் குறியீட்டில் தமிழகம் 3வது இடத்தைப் பெற்றுள்ளது. முதல் இடத்தில் கர்நாடகம், இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிரம் உள்ளிட்ட இடங்கள் உள்ளன. தமிழகம் விரைவில் முதலிடத்தைப் பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்தைப் பொறுத்தவரை, மதுரை சுங்குடிசாரி, கோயம்புத்தூர் கோரா காட்டன், ஆரணி சில்க், தஞ்சாவூர் பெயின்டிங், தஞ்சாவூர் தட்டு, நாச்சியர் கோவில் குத்துவிளக்கு, சுவாமி மலை வெண்கலச் சிலை, பத்தமடை பாய், மாமல்லபுரம் கற்சிற்பம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்குப் புவிசார் குறியீடுகள் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த வகையில் தற்போது சீரகச் சம்பா அரிசியையும் விண்ணப்பித்துள்ளேன். காரணம் தமிழத்தின் தலைசிறந்த பாரம்பர்ய நெல் என்பதால், அதற்கு புவிசார் அங்கீகாரம் தேவை. காவிரி ஆற்றுப்படுகையில் நெல்களின் தாய் என்று அழைக்கப்படும் சீரகச் சம்பா அரிசி வகை அழிந்துவிடக் கூடாது என்பதே என் நோக்கம். மேலும் இந்த வகை அரிசி புற்றுநோயைக் கட்டுபடுத்தும் வல்லமை பெற்றுள்ளதாக எனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

மேலும், அவர் கதருக்குப் புவிசார் குறியீடு வாங்குவதே தன்னுடைய லட்சியம் என்று தெரிவித்தார். கதர் இந்தியாவின் சொத்து என்பதால் இந்தியா முழுவதிற்கும் கதர் உரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும், தனிப்பட்ட நிறுவனத்திற்கோ, அமைப்பிற்கோ சென்றுவிட கூடாது, அதற்கு தற்போதே சட்டப்பாதுகாப்பு வழங்கி, எதிர்காலச் சந்ததியினருக்குக் கதர் ஆடையின் அருமையை உணர்த்த வழி வகை செய்யவேண்டும் என்றார். காரணம் கதர் பாகிஸ்தானிலும் உற்பத்தியாவதாக அந்நாடு கோரி வரும் நிலையில், நாம் கதருக்குப் புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற தவறினால் அதை பாகிஸ்தான் உரிமை கொண்டாடும் அபாயம் ஏற்படும் எனத் தெரிவித்தார். தற்போது அந்த விண்ணப்பம் நிலுவையில் உள்ளது. அதற்கு அங்கீகாரம் கிடைத்தால் கதர் பாதுகாக்கப்படும் என்றார். மேலும் சேலம் மாம்பழம், ஓசூர் ரோஜா, கோவில்பட்டி கடலைமிட்டாய், மணப்பாறை முறுக்கு, ஆகிய பொருள்களுக்குப் புவிசார் குறியீடு விண்ணப்பித்து நிலுவையில் உள்ளது எனவும் தெரிவித்தார்.