`பாரம்பர்ய சின்னங்களை அழிக்கிறார்கள்' - குமுறும் கவிஞர் பா.விஜய்...!

கனிமங்களை எடுக்கின்ற போர்வையில் சில நிறுவனங்கள் பழைமையான வரலாற்றுச் சின்னங்களை அழிக்கும் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகக் கவிஞர் பா.விஜய் குற்றம் சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் `காலத்தை வென்ற கங்கைகொண்டானே' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான பா.விஜய் கலந்துகொண்டு `காலத்தை வென்ற கங்கை கொண்டானே' என்ற புத்தகத்தை வெளியிட்டார். நிகழ்ச்சியில் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் வளர்ந்திருந்த கட்டடக்கலை, நிர்வாகம் உள்ளிட்டவை குறித்துப் பேசினர். மேலும் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜேந்திர சோழன் உள்ளிட்ட சோழர்களின் வரலாறு குறித்தும் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வரலாற்றுப் பேராசிரியர்கள், தொல்லியலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பலரும் கலந்து கொண்டனர். 

பா விஜய்

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கவிஞர் விஜய்,  ``சோழர்களின் ஆட்சியில் நீண்ட காலம் தலைநகராக விளங்கிய தஞ்சை, கங்கைகொண்டசோழபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள் புதைந்து கிடக்கின்றன. சோழர்கள் ஆட்சி செய்த இந்தப் பூமியில் மீத்தேன் உள்ளிட்ட கனிமங்கள் எடுக்கின்ற போர்வையில் சில நிறுவனங்கள் வரலாற்றுச் சின்னங்களை அழிக்க முயற்சி செய்கின்றன. இதனால் நமது முன்னோர்கள் சோழர்களின் பெருமைகளை அறிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே, வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டுமே தவிர அழிக்க நினைக்கக் கூடாது.

பா விஜய்

கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா போன்ற தலைவர்கள் எல்லாம் திரையுலகில் இருந்து ஆட்சி செய்தவர்கள்தான். திரையுலகம் மற்றும் இன்றி எத்துறையிலிருந்து வேண்டுமென்றாலும் தகுதியானவர்கள் யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம். அதற்கு எவ்விதத்திலும் யாரும் தடைவிதிக்க முடியாது" எனத் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!