வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (12/06/2018)

கடைசி தொடர்பு:07:39 (13/06/2018)

அ.தி.மு.க உட்கட்சி மோதல் எதிரொலி... சென்னை மீனவர் பஞ்சாயத்து தேர்தலில் பதற்றம்!

ஐக்கிய மீனவர் பஞ்சாயத்து சபையை யார் நடத்துவது என்ற போட்டியால் வட சென்னை அ.தி.மு.க.வில் மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மீனவர்

க்கிய மீனவர் பஞ்சாயத்து சபையை யார் நடத்துவது என்ற போட்டியால் வட சென்னை அ.தி.மு.க-வில் மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை ஆர்.கே நகர் தொகுதி காசிமேடு பகுதியில் மீனவர்கள் நலவாழ்வுக்கான 'மீனவர் ஐக்கிய பஞ்சாயத்து சபை' செயல்பட்டு வருகிறது. மீனவ குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு இந்தப் பஞ்சாயத்து சபையில் வைப்பு நிதியாக உள்ள பணம் செலவிடப்பட்டு வருகிறது. திருவொற்றியூர், ராயபுரம், காசிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த எட்டு மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்களே சுழற்சி முறையில் ஒவ்வொரு தேர்தலின்போதும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், காசிமேடு பகுதியில் உள்ள ஐக்கிய மீனவர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தை யார் திறப்பது, யார் தலைவராக இருப்பது என்ற போட்டி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட எல்லைக்கு உட்பட்ட ஆர்.கே நகர் தொகுதியில்தான் இந்த ஐக்கிய சபை இருந்து வருகிறது. 

இந்த நிலையில், ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வும், மீன் வளத்துறை அமைச்சருமான டி.ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் ஆர்.கே நகர் தொகுதியில் உள்ள இந்த ஐக்கிய சபையை வருகிற வெள்ளிக்கிழமையன்று அதிரடியாக திறக்க ஏற்பாடு செய்துள்ளனராம். இந்தத் தகவல் வெளியில் கசிந்துள்ளதால் மீனவர்களிடமும், மாவட்ட அ.தி.மு.க.வினரிடமும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதுகுறித்து காசிமேடுப் பகுதி மீனவர்களிடம் பேசியபோது ``வெள்ளிக்கிழமை ரம்ஜான் என்பதால், சட்டமன்றம் நடக்காது. அதேபோல அதற்கு அடுத்து வருகிற சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாள்களும் அரசு விடுமுறை என்பதால் சட்டமன்றம் நடக்காது. ஆகவே, தொகுதி அமைச்சரான ஜெயக்குமார் எங்களுக்கு முழு ஆதரவும் கொடுப்பார் என்று உள்ளூர் ஆதரவு தரப்பு கூறுகிறது. அவர்கள் சொல்வதுபோல் வெள்ளிக்கிழமையன்று அதிரடியாக ஐக்கிய சபை திறப்பு விழா நடந்தால் அதை எதிர்க்கொள்ள வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ் ராஜேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் தயாராகி வருகின்றனர். ஐக்கிய மீனவ கிராம பஞ்சாயத்து சபையின் மூலம் மீனவர்களுக்கு நல்லது நடக்கும் என்று தொகுதி மக்கள் காத்திருக்கிறார்கள். ஆனால், ஐக்கிய சபையை யார் திறப்பது என்பதில் நடக்கும் போட்டி மீனவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது" என்று தெரிவித்தார்கள். 

அதேபோல இந்த பதற்றமான சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்று போலீஸாரும் திகைத்து வருகின்றனர்.