வெளியிடப்பட்ட நேரம்: 04:15 (13/06/2018)

கடைசி தொடர்பு:07:44 (13/06/2018)

கல்லணையில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்...!

குறுவை சாகுபடிக்கு மேட்டூரில் தண்ணீர் திறக்காததால், கல்லணையில் இறங்கிய விவசாயிகள் நெல்லை தூவி, நாற்று நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொரு போராட்டத்தில் காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் அதிகளவு மழை பெய்து, காவிரியில் நீர் பெருக்கெடுத்து வருவதுடன் விவசாயம் செழிக்க வேண்டும் எனக் கையில் மெழுகுவத்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். 

காவிரி டெல்டா பகுதியில்  குறுவை சாகுபடிக்குத் தேவையான தண்ணீரை மேட்டூர் அணையிலிருந்து தமிழக அரசு இந்த மாதம் 12-ம் தேதி திறந்திருக்க வேண்டும். ஆனால், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும் கர்நாடக அரசு தமிழகத்துக்குரிய தண்ணீரை தர மறுப்பதாலும் தண்ணீர் திறக்க முடியவில்லை. இதைச் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதற்குக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தொடர்ந்து தமிழகத்துக்கு எதிராகச் செயல்படும் கர்நாடக அரசைக் கண்டித்தும், காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனவும், தமிழக புரட்சிகர விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கல்லணை காவிரி அற்றில் இறங்கி நெல் தூவியும், நாற்று நட்டும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இந்தப் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர். 

இதனால் 50க்கும் மேற்பட்ட போலீஸார் கல்லணையில் காலை 9 மணி முதலே  குவிக்கப்பட்டனர். போலீஸார் போராட்டக்காரர்களை தடுப்பதற்காக கரிகாலச் சோழன் சிலை அருகே நின்றுகொண்டிருந்தனர். இந்நிலையில், விவசாயிகள், தோகூர் பஸ் ஸ்டாப் வழியாக  மாற்று வழியில் கல்லணைக்குள் இறங்கி, காவிரி ஆற்றில் விதை நெல்களை தெளித்தும், நாற்று நட்டும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்ய முயன்றபோது விவசாயி ஒருவர் காவிரி ஆற்றுப் பாலத்தில் ஏறும் படிக்கட்டில் இருந்து காவிரி ஆற்றில் குதித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டதுடன்  விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்களை திருக்காட்டுபள்ளி போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல் கும்பகோணத்தில் குத்தகை விவசாயிகள் சங்கத்தினர் பொதுப்பணித்துறை அலுவலகத்தின் பின்புறம் உள்ள காவிரி ஆற்றில் இறங்கி ஜூன் 12ல் தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால் திறக்கவில்லை. இதனால் கையில் மெழுகுவத்தி ஏந்தி, காவிரி நீர்பிடிப்பு பகுதியில் அதிகளவு மழை பெய்து, காவிரியில் நீர் பெருக்கெடுத்து வரவேண்டும். விரைவில்  காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து வந்து, விவசாயிகள், காலத்திலேயே பயிர் செய்து விவசாயம் செழிப்பதுடன், விவசாயிகளும் செழித்து வாழ வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க