பேருந்தைப் பழுது பார்க்கும்போது விபத்து - 5 தொழிலாளர்கள் படுகாயம் | 5 person injured in kumbakonam bus depo accident

வெளியிடப்பட்ட நேரம்: 02:45 (13/06/2018)

கடைசி தொடர்பு:07:49 (13/06/2018)

பேருந்தைப் பழுது பார்க்கும்போது விபத்து - 5 தொழிலாளர்கள் படுகாயம்

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பேருந்தை பழுதுபார்த்து கொண்டிருந்த போது ஜாக்கி நழுவியிதில் 5 தொழிலாளர்கள் பேருந்தின் அடியில் சிக்கியதோடு அவர்களுக்கு கால் முறிந்து படுகாயமடைந்தனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் பேருந்தைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தபோது ஜாக்கி நழுவியதில் 5 தொழிலாளர்கள் பேருந்தின் அடியில் சிக்கியதால் அவர்கள் படுகாயமடைந்தனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்து காரணமாக படுகாயமடைந்தவர்

அரசுப் போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தில் நாகை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், கும்பகோணம்  ஆகிய 6 மண்டலங்களிலும் 3500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கும்பகோணம் மற்றும் நாகை மண்டலங்களில் மட்டும் 1,500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் தலைமை அலுவலகத்தின் பின்புறம் பேருந்துகளைப் புதுப்பிக்கும் பிரிவும் செயல்பட்டு வருகிறது. இங்குப் பழைய பேருந்துகள் சீரமைத்து பயன்பாட்டுக்காக அனுப்பி வைக்கப்படும் பணியும் நடக்கிறது.

இதில் தற்காலிக தொழிலாளர்கள் முதல் நிரந்தரத் தொழிலாளர்கள் என ஏராளமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம்  பேருந்தை பழுதுநீக்கும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதற்காகப் பேருந்தை ஜாக்கி வைத்துத் தூக்கி அதன் அடியில் படுத்தவாறு பழுதுகளைச் சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஜாக்கி நழுவி பேருந்து கீழே இறங்கியது. இதில் பேருந்துக்கு அடியில் இருந்த  தொழிலாளர்கள் 5 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த மற்ற தொழிலாளர்கள் அவர்களை மீட்கும்  பணியில் ஈடுபட்டனர். பின்னர்  ஹைட்ராலிக் ஜாக்கியை வைத்து பேருந்தை தூக்கி அடியில் சிக்கியவர்களை மீட்டனர்.  இந்த விபத்தில் படுகாயமடைந்த 5 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதில் அருண்குமார் என்பவரின் கால்கள் முழுவதுமாக முறிந்ததால் அவர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி சிகிச்சைக்காகக் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட தகவல் பரவி  அனைத்துப் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் கும்பகோணம் போக்குவரத்துக் கழக பணிமனையில் வேலை பார்க்கும் அலுவலர்கள் மற்றும்  அதிகாரிகள் எனப் பலரும் கும்பகோணம் மருத்துவமனையில் குவிந்தனர். 

இதேபோல் கடந்த ஆண்டு கும்பகோணம் கோட்டத்துக்குட்பட்ட நாகை மண்டலத்தில் உள்ள பொறையாறு போக்குவரத்துக் கழக பணிமனையின் தொழிலாளர்கள் ஓய்வறை கட்டடத்தில் தூங்கிக்கொண்டிருந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் மீது கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் உடல் நசுங்கிப் பலியாயினர். தற்போதும் கும்பகோணம் தலைமை கோட்டத்திலேயே இதுபோன்ற சம்பவம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்குப் பணியின்போது எந்தப் பாதுகாப்பும் இல்லாததோடு, பழுது பார்ப்பதற்கு உரியத் தரமான தளவாடப் பொருள்களும் இல்லை. இதனால்தான்  இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகத்தின் மிகப்பெரிய அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட  பணிமனை எனக்கூறப்படும் கும்பகோணம் அரசுப் போக்குவரத்து பணிமனையில் பேருந்து பழுது நீக்கும் பணியின்போது தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சம்பவம் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க