தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத் தலைவராக ரிங்கேஷ் ராய் பொறுப்பேற்பு!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக கழகத்தின் புதிய பொறுப்புத் தலைவராக, ஒடிசா பாரதீப் துறைமுகத்தின் தலைவராக உள்ள ரிங்கேஷ் ராய் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். 


தூத்துக்குடியில் இயங்கி வரும் வ.உ சிதம்பரனார்  துறைமுக கழகத்தின் தலைவராக, கடந்த, 2017 செப்டம்பர்  மாதம் முதல் ஐ.ஜெயக்குமார் பொறுப்பு வகித்து வந்தார். இவர், கடந்த 2015-ம் ஆண்டு முதல் கோவா துறைமுகத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.  இந்த நிலையில், இவருக்குப் பதில் ஒடிசாவிலுள்ள பாரதீப் துறைமுகத்தின் தலைவராக உள்ள ரிங்கேஷ் ராய் என்பவர், கூடுதல் பொறுப்பாக,  இன்று முதல் தூத்துக்குடி தலைவர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.  

இந்திய ரயில் போக்குவரத்து அதிகாரியான ரிங்கேஷ் ராய், கடந்த 23.12.2015 முதல் ஒரிசாவில் உள்ள பாரதீப் துறைமுகத்தின் தலைவராகப் பணி புரிந்து வருகிறார். ரயில்வே வாரியத்தின் நிலக்கரி இயக்குநராகவும், திட்டமிடல் இயக்குநராகவும், கிழக்கு கடற்கரை ரயில்வே துறையின் தலைமை சரக்குப் போக்குவரத்து மேலாளராகவும் மற்றும் தென் கிழக்கு ரயில்வே துறையில் பல்வேறு  செயல்பாட்டுத் துறையில் பணிபுரிந்துள்ளார்.  

இவர், ரயில்வே தகவல் அமைப்பு செயல்பாட்டு மையத்தின் பொது மேலாளராக இருந்தபோது, சரக்குப் போக்குவரத்து செயல்பாட்டினை கண்காணிக்க,  ‛பாரிசாலன்’  என்ற மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளார். 

வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தின் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடிய, ரிங்கேஷ் ராய், ``வ.உ.சிதம்பரனார் துறைமுகம் அதன் செயல்பாட்டு திறன், சரக்கு கையாளும் நேரம் குறைப்பு மற்றும் உள்கட்டமைப்புகள் மேம்படுத்துதல் மூலம் புதிய வாடிக்கையாளர்களை கவர்வது மட்டும் இல்லாமல்,  நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!