வெளியிடப்பட்ட நேரம்: 09:55 (13/06/2018)

கடைசி தொடர்பு:09:55 (13/06/2018)

ஆட்டோக்காரி பவானி! - ஒரு '36 வயதினிலே' கதை

கோடைக்காலத்தின் வெயிலற்ற காலைகள் அலாதியானவை. இப்படியான காலைப் பொழுதுகள்தான் நம்மைச் சுற்றி இருக்கும் மரங்கள்... செடிகள்... கொடிகள்... பொதி மேகங்கள் என இயற்கையை இன்னுமாய் உற்றுக் கவனிக்க வைக்கும். அப்படியான புத்துணர்ச்சி மிக்க காலைவேளையில்தான் இயல்பான அந்தச் சந்திப்பும் நிகழ்ந்தது. ரயில் நிலையத்திலிருந்து அலுவலகம் செல்ல, பேரம் பேசுவதற்கு ஏதுவான ஆட்டோ ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தபோது அந்த ஆட்டோ சட்டென கண்ணில்பட்டது. பிங்க் நிறப்  புடவைக்கு மேல் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான காக்கி சீருடையை அணிந்துகொண்டு  அமைதியாக ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தார் அந்தப் பெண். என்னைப் பார்த்ததும் மெல்லியதாகச் சிரித்தார். சவாரிகளைக் கூவி அழைத்து அள்ளிப் போட்டுக்கொண்டு பறக்கும், பெரும்பாலும் ஆண்களே நிறைந்திருக்கும் ஓட்டுநர் பணியில்... பெண் ஒருவர் ஓட்டுநராகப் பணிபுரிவதைப் பார்ப்பது அரிதான காட்சி. முன் யோசனை எதுவும் இல்லாமல் செல்ல வேண்டிய இடத்தை மட்டும் கூறிவிட்டு சட்டென அவர் ஆட்டோவில் ஏறிக்கொண்டேன். காபி ஷாப் உரையாடல்கள் மட்டும்தான் சுவாரஸ்யமானது என்னும் க்ளிஷேக்களுக்கு எல்லாம் விதிவிலக்காக அமைந்தது... அந்தப் பத்து நிமிட ஆட்டோ பயணமும் அவருடனான உரையாடலும். 

ஆட்டோ

``உங்களை இந்த ஆட்டோ ஸ்டாண்டில் பார்த்ததே இல்லையே... ஆண் ஓட்டுநர்கள்தானே இங்கே முழுக்க இருப்பாங்க..?”

``நான் தலைமைச் செயலகத்துல ஆட்டோ ஸ்டாண்ட்ல இருக்கேன்மா. அங்க என்ன மாதிரி 20 பேர் இருக்கோம். இங்க எப்பவாச்சும் வருவேன். வந்தா போலீஸ் குச்சிய வெச்சு மிரட்டி நம்ம ஆட்டோ மேலேயே அடிப்பாங்க. அது பிடிக்காது. அதுக்காகவே பெரும்பாலும் இந்தப் பக்கம் வரமாட்டேன்.”

(சற்று இடைவெளி விட்டவர் மீண்டும் அவரே பேச்சைத் தொடர்ந்தார்)

``ஆனா பாருங்க... இந்த லேடி டிரைவர்களுக்கு ஜென்ட்ஸ் டிரைவருங்க எவ்வளவோ மேல்! போட்டி பொறாமை இல்லாம சவாரி விட்டுக் கொடுத்துக்கறாங்க. நான் வந்து சவாரி ஏத்துனாலுமே எதுவும் சொல்லறது இல்ல. ஆனா அவங்கள குத்தம் சொல்லியும் தப்பில்ல. அவங்க அவங்க வயித்துப் பிழைப்பைப் பார்த்தாகணுமே...”

உள்ளுக்குள் புதைந்து கிடந்த ஏதோ ஒரு சிந்தனைதான் முன்பின் தெரியாத என்னிடம் அவரைத் தொடர்ந்து பேசச் செய்து கொண்டிருந்தது. இந்த உலகில் பேசுபவர்கள் அதிகம்... அதைக் கேட்பதற்கான காதுகள்தான் குறைவு. அவர் பேசட்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். இரண்டு பெண்களுக்கிடையிலான பரஸ்பர உரையாடலாக அது விரிந்தது.

``காலேஜ்ல படிக்கறிங்களா? இல்ல..வேலைக்குப் போகறிங்களாம்மா? உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா...?”

``வேலைக்குதான் போயிட்டு இருக்கேன். இல்லை.. ஏன் கேட்கறீங்க?” 

``கல்யாணமெல்லாம் ரொம்ப லேட்டா செய்துக்கங்கம்மா.பெண்களுக்கு என்று கையில எப்போதுமே ஒரு சேமிப்பு வேணும். அதுக்கப்புறம் செய்துக்கங்க. ஆணுக்குப் பெண் சமம் அப்படிங்கும்போது யாரையும் நாம நம்பி இருக்கக்கூடாது. என் பையனுக்கே நான் அதைத்தான் சொல்லிருக்கேன். இதையெல்லாம் எனக்குச் சொல்லிக்கொடுக்க யாருமில்லை, என் அனுபவத்திலேர்ந்து உங்களுக்குச் சொல்லறேன்”

(சிரித்தபடியே) ``சரி! உங்களுக்கு எப்போ கல்யாணம் நடந்துச்சு?” 

``அது 20 இல்ல 21 வயசுலம்மா! எனக்கு அப்போ யோசிக்கலாம் தெரியலை. கல்யாணம் செய்துவைச்சாங்க... செய்துக்கிட்டேன். இரண்டு பிள்ளைங்க பிறந்துச்சு. அப்புறம் என்னோட 25 வயசுல என் புருஷன் இறந்துட்டாரு. எதிர்காலம் பற்றி யோசிக்க வேண்டிய வயசுல, எதிர்காலமே என்னனு தெரியாம இரண்டு பிள்ளைகளோட நின்னேன். வாழ்க்கை போச்சுங்கற சிந்தனையில இரண்டு வருஷம் கிடந்தேன். ஆனா எத்தனை நாள் அப்படியே கிடக்க முடியும்? எனக்கு எதிர்காலம் இல்லைனாலும் என் பிள்ளைங்களுக்கு இருந்துச்சே!  அதுக்காக எழுந்தேன். அதுக்கப்புறம் இத்தனை வருடமா இந்த ஆட்டோதான் என் கூட சென்னையைச் சுத்துகிறது. இப்படி ஆட்டோ ஓட்டி சம்பாதிச்சுதான் குடும்பம் ஓடுது. பையன் புரசைவாக்கத்துல ஒரு ஸ்கூல்ல ப்ளஸ்-டூ படிக்கறான். எனக்கும் வயசு இப்போ 36 ஆகுது. காலம் ஓடுது!” என்று தன் மறுபிறப்பைச் சர்வசாதாரணமான வார்த்தைகளால் சொல்லிவிட்டுச் சிரிக்கிறார். 

``இன்னொரு பையன் என்ன செய்யறாரு?”

``அந்தப் பையன் இறந்துடுச்சும்மா. இப்போ இவனுக்காகத்தான் வாழ்ந்துட்டு இருக்கேன். ஆனால், ஆட்டோ ஓட்டுறதுல நிரந்தரமான சம்பளம் கிடையாதும்மா. ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பேன். மற்றொரு நாள் கையில் இருநூறு ரூபாய்கூட இருக்காது. இதுல ஆட்டோவுக்கு தவணை கட்டியதுபோக என் பையனுக்கு படிப்புக்கு கட்டணம் செலுத்த, புத்தகம் வாங்கனு பணம் தேவைப்படுது. அதுக்கு என்னோட வருமானம் மட்டும் போதுமானதா இல்லை. எப்போதாவது தலைமைச் செயலகத்துல தெரிஞ்ச நபர்கள் உதவி செய்வாங்க. ஆனால், நாம உதவின்னு போய் கேட்டுட்டு நிற்க முடியாதே? இன்னிக்குக்கூட என் பையன் காலுக்குப் போட்டுக்க பள்ளிக்கூடத்துக்கான ஷூஸ் அப்புறம் படிக்கத் தேவையான கைடு எல்லாம் கேட்டிருக்கான்... வாங்கணும். ஆனா இன்னிக்கு வருமானம் நல்லபடியாக இருந்தால்தான் என் பையனுக்குத் தேவையானதை வாங்க முடியும்...” 

``நான் ஒன்று கேட்கட்டுமா... தவறா எடுத்துக்க மாட்டீங்களே?”

``கேளுங்கம்மா...”

(சற்று தயக்கத்துடனேயே அந்தக் கேள்வியைக் கேட்டேன்) ``36 வயதுதானே ஆகுது! நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் செய்துக்கலை?”

பவானி

``நியாயமான கேள்விதாம்மா. எனக்கு அப்படி ஒரு நினைப்புத் தோணலை. பெண்களுக்கு இந்த ஆட்டோ ஓட்டுற தொழில் மற்ற தொழில் மாதிரி இல்லை. திடீர்னு சவாரியில ஆறு பேர்கூட என் ஆட்டோவில் ஏறுவாங்க. அந்தச் சமயத்துல முன் இருக்கையில என் பக்கத்துல ஆண்களும் உட்காரும் மாதிரியான சூழல் ஏற்படும். இரவில் எல்லாம் ஆட்டோ ஓட்ட வேண்டி இருக்கும். பாதுகாப்பு பார்த்தால் வயிற்றுப்பிழைப்பைப் பார்க்க முடியாது. கூட இருக்கப் போறவரு இதை எல்லாம் புரிஞ்சுக்காம எதுவும் தவறாக எடுத்துக்கிட்டார்னா... குடும்பம்தானே பாதிக்கப்படும். என்னோட தேவைக்காக என் மகனோட வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாதே?”   

இறங்கும் இடம் வந்தது.பணத்தைக் கொடுத்துவிட்டு இறங்கியதும், சட்டென்று நினைவு வந்தவளாய், ``அம்மா உங்க பேரு கேட்க மறந்துட்டேனே....” என்றேன். 

``தலைமைச்செயலகம் பக்கம் ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்தா பவானின்னு கேளுங்க. சொல்லுவாங்க” என்று சொல்லிவிட்டு அடுத்த சவாரிக்காகச் சிட்டாகப் பறந்தார். தன் பிள்ளைக்குத் தேவையான கைடும் ஷூவும் வாங்க வேண்டுமே!

`சிலருக்கு சாதாரணமான மனிதர்களாக வாழ்வதற்கே அசாதாரணமான ஆற்றல் தேவைப்படுகிறது என்பதை நாம் பெரும்பாலும் உணர்வதில்லை!'

- ஆல்பர்ட் காம்யூ

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்