துப்பாக்கி ஏந்திய போலீஸோடு வலம் வரும் எஸ்.வி.சேகர்!

தமிழக போலீஸ் வலைவீசித் தேடுவதால் தலைமறைவாக இருப்பதாகச் சொல்லப்படும் பா.ஜ.க பிரமுகர் எஸ்.வி.சேகர், காஞ்சிபுரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு உலா வருகிறார்.

எஸ்.வி.சேகர்


எஸ்.வி. சேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான தகவல்களை சமூகவலைதளத்தில் பதிவு செய்திருந்தார். இது பெரும் சர்ச்சையாகவே, அவர் பகிரங்க மன்னிப்புக் கோரினார். ஆனாலும் அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அவரை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அவர் மீது வழக்கும் பதியப்பட்டது. இந்த நிலையில், கைதாவதைத் தவிர்க்க அவர் தலைமறைவானார். பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட வில்லை. அதைத் தொடர்ந்து ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்திலும் அவர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அங்கும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவர் தலைமறைவாகவே இருந்து வருகிறார். 

எஸ்.வி.சேகர்

இந்நிலையில், அவர் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு போலீஸ் பாதுகாப்போடு வந்தார். நிதானமாகவே சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அப்போது அவரை சிலர் தயங்கித் தயங்கி புகைப்படம் எடுத்தனர். இயல்பாகச் சிரித்தவர், “போட்டோதானே... தாராளமா எடுத்துக்குங்க“ என்று போஸ் கொடுத்தார். இதனால் சிலர் அவருடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்கள். துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவரும் அவருடன் வந்திருந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அம்மன் கோயிலுக்குச் சென்று திரும்பும்போது அவர் படப்பையில் உள்ள அந்த ஹோட்டலுக்கு மதிய உணவுக்காக வந்திருக்கிறார். மதிய உணவை முடித்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!