வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (13/06/2018)

கடைசி தொடர்பு:13:32 (13/06/2018)

மரத்துக்குள் ஓட்டை போட்டு நுழையும் `ஏர் அழிஞ்சல் மரம்'! ஓர் ஆச்சர்ய தகவல்

இயற்கை படைப்பில் எத்தனையோ அதிசயங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் ஏர் அழிஞ்சல் மரம். இந்த மரத்தில் உள்ள பழங்களைப் பறவைகள் தின்றுவிட்டு விதையைப் போட்டால், கீழே விழும் விதைகள் தானாக நகர்ந்துபோய், மரத்தில் ஏறி, மரத்தைத் துளைத்துக் கொண்டு உள்ளே போகும் என்ற அதிசயம் நிகழ்கிறது.

ஏர் அழிஞ்சல் மரம்

கேரளாவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வளரும் இந்த மரம், தமிழகத்தில் மூன்றே மூன்று இடங்களில்தான் உள்ளனவாம். பழனி அருகே உள்ள இயற்கை மருத்துவர் செல்வராஜ் என்பவரது வீட்டில், விழுப்புரம் மாவட்டத்தில், உடுமலைப்பேட்டை பகுதியில் என்று மூன்று இடங்களில்தான் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஏகப்பட்ட மருத்துவக் குணங்களைக் கொண்ட இந்த மரத்தின் விதைகளைச் சேகரித்து வந்து கரூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி மனோகரன் என்பவர் தனது தோட்டத்தில் ஊன்றி வைத்திருக்கிறார். இந்த ஏர் அழிஞ்சல் மரம் பற்றி அவரிடம் பேசினோம்.

``இந்த மரத்தின் விதையில் வசிய மை, மாந்திரீக மை தயாரிக்கிறாங்க. மருத்துவத்துக்காகக் குளித்தைலம்ங்கிற தைலத்தையும் தயாரிக்கிறாங்க. இந்த மரத்தின் விதைகள் எப்படி மரத்துக்குள் ஓட்டை போட்டு போகுதுன்னு எனக்கும் ஆச்சர்யமா இருந்துச்சு. அப்புறம்தான் அதுபற்றி விசாரிச்சப்ப முழுவிவரம் தெரிய வந்துச்சு. இந்த மரத்தில் பூ பூக்கும்போது ஒருவகை பூச்சி, அந்த பூவில் அமர்ந்து முட்டையிடுமாம். அந்த பூ பழமாயி, அதை ஏதோ ஒரு பறவை சாப்பிட்டு, அதன் விதையை தரையில் போடும். அப்போ அந்த முட்டை பொரிந்து புழு உண்டாகி, அந்த புழு அந்த விதைக்குள் போய்விடுமாம். அந்தப் புழுதான் அந்த விதையை நகர்த்திக்கொண்டுபோய், மரத்தில் ஏற்றி, மரத்துக்குள் துளையிட்டு, உள்ளே வைத்துவிட்டு, பின்பு பூச்சியாக மாறி வெளியே வந்துவிடுமாம். இந்த மரத்தைப் பற்றி கேள்விப்பட்டதும் ஆச்சர்யமாயிட்டு. ஏற்கெனவே என் தோட்டத்தில் ஆப்பிள், திருவோடு மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறேன். இதனால், பழனி செல்வராஜ் வைத்தியர்கிட்ட இந்த ஏர் அழிஞ்சல் மர விதைகள் பத்தை வாங்கிட்டு வந்து என் தோட்டத்தில் ஊன்றி இருக்கிறேன். இந்த மரம் எல்லா இடத்திலும் வளராதுன்னு சொன்னாங்க. 'நான் வளர்த்து காட்டுறேன்'னு வாங்கிட்டு வந்து, விதைகளை ஊன்றி இருக்கிறேன்" என்றார்.