வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (13/06/2018)

கடைசி தொடர்பு:13:25 (13/06/2018)

பாகிஸ்தான் அத்துமீறல்! இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழப்பு

காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்துக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  

இந்திய ராணுவ வீரர்கள்

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த ஒரு வாரக் காலமாக காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை ஜம்மு காஷ்மீரில் சம்பா செக்டார் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு அசிஸ்டன்ட் கமாண்டன்ட், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் என நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

இது குறித்து பேசியுள்ள இந்திய பாதுகாப்புப் படை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்தியா ரம்ஜான் போர் நிறுத்தத்துக்கு மதிப்பளித்து அமைதியாக உள்ளது. அதையும் மீறித் தாக்குதல் நடத்தினால் கண்டிப்பாக பதில் தாக்குதல் நடத்தப்படும். நாட்டைப் பாதுகாப்பது ராணுவ வீரர்களின் கடமை. வீரர்கள் அனைத்து நேரத்திலும் கவனமாக இருக்கிறார்கள்'' என்று கூறினார். 

இதேப் போன்று இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.