`எந்தப் பெண்ணுக்கும் இப்படி நடக்கக் கூடாது’ - காவல் நிலையத்தில் கதறிய இளம்பெண்ணின் தாய் 

தாய்

``என் மகளுக்கு நடந்த கொடுமை வேறு எந்தப் பெண்ணுக்கும் நடக்கக்கூடாது'' என்று கானத்தூர் காவல்நிலையத்தில் இளம்பெண்ணின் தாய் கண்ணீர்விட்டு கதறியுள்ளார். 

சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பனையூரைச் சேர்ந்தவர் ரேவதி. ஹோட்டல் ஒன்றில் வேலைபார்க்கும் இவர், கானத்தூர் காவல் நிலையத்துக்கு  தன்னுடைய 13 வயது மகளை அழைத்துக்கொண்டு வந்தார். இன்ஸ்பெக்டர் ரியாஸ்சுதினிடம் கண்ணீர்மல்க ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். அதில்,`என்னுடைய மகள் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தார். அவரை ஏமாற்றி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற ஒருவர், அங்கு அவரிடம் அநாகரிகமாக நடந்துள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை வெளியில் தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால், பயந்துபோன என் மகள் எதையும் என்னிடம் சொல்லவில்லை. ஆனால், உடலளவிலும் மனதளவிலும் மகள் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டார். அதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை என்னிடம் சொல்லி கதறி அழுதார். எனவே, சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். 

இதையடுத்து போலீஸார், ரேவதி, குறிப்பிட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விசாரணையில், 13 வயது இளம்பெண்ணிடம், எல்லை மீறி நடந்தது ரகமத்துல்லா என்று தெரியவந்தது. இவர் பனையூரைச் சேர்ந்தவர். ரகமத்துல்லாவின் நண்பர் சாகுல். இவரும், அந்த பெண்ணிடம் தவறாக நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழும் எஸ்.சி, எஸ்.டி பிரிவின் கீழும் போலீஸார் வழக்கு பதிந்து கைதுசெய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், கைதானவர்கள் ஆகியோருக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பாதிக்கப்பட்டது மைனர் பெண் என்பதால் அவர் குறித்த விவரத்தை வெளியிடவில்லை. ரகமத்துல்லாவும் சாகுலும் பனையூரைச் சேர்ந்தவர்கள். சாகுல்தான் மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணிடம் பழகியுள்ளார். அதன்பிறகு இளம்பெண்ணை ரகமத்துல்லாவுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இவர்கள் இருவரும் அந்த இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்துள்ளதாக எங்களுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் அவர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளோம். சாகுல், ஷேர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்குத் திருமணமாகி, குழந்தைகளும் உள்ளன. அதுபோல ரகமத்துல்லா, கூலித் தொழிலாளி. இவரும் திருமணமானவர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட, ஒருவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அதுதொடர்பாக எங்களுக்கு புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம், பெண் போலீஸார் தனியாக விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அவர் சம்பவத்தன்று நடந்த முழுவிவரத்தையும் சொல்லியுள்ளார். அதன் அடிப்படையில்தான் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளோம்" என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!