வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (13/06/2018)

கடைசி தொடர்பு:14:00 (13/06/2018)

25 வயது வாலிபரின் இருதயம் 10 வயது சிறுவனுக்குப் பொருத்தப்பட்டது! - சென்னை அரசு டாக்டர்கள் சாதனை

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவைசிகிச்சை சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் வெற்றிகரமாகச் செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அரசு மருத்துவமனை
 

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகில் உள்ள சந்தானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முனியசாமி - ஜெசி தம்பதியினரின் 10 வயது மகன் பிரவின் குமாருக்கு 7 வயதிலிருந்து இடைவிடாது இருமல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தனியார் மருத்துவமனையிலிருந்து அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டார். 2017-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, இருதய மாற்று அறுவைசிகிச்சைக்காகப் பெயர் பதிவு செய்யப்பட்டது. கடந்த மே 24-ம் தேதி மூளைச்சாவு அடைந்த 25 வயது வாலிபரின் இதயம் பெறப்பட்டது. அன்று காலை 2 மணியளவில் இருதய மாற்று அறுவைசிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் செய்யப்பட்டது.

இந்த அறுவைசிகிச்சையை நெஞ்சக மற்றும் இருதய அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் மனோகரன் தலைமையில் 4 மணி நேரம் நடைபெற்றது. இதுவரை 6 இருதய மாற்று அறுவைசிகிச்சை சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. இருதய மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட பிரவின் குமார் தற்போது நலமுடன் உள்ளார். அவரை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் தாரேஸ் அகமது, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் இன்பசேகரன், அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார், மருத்துவக் குழுவினர் மற்றும் சிறுவனின் பெற்றோர் கலந்துகொண்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க