‘கைதுசெய்ய அனுமதியிருந்தும் போலீஸ் பாதுகாப்புடன் நடமாடுகிறார் எஸ்.வி. சேகர்’- ஸ்டாலின் காட்டம்

போலீஸ் பாதுகாப்புடன் எஸ்.வி.சேகர் வெளியில் செல்வதாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்டாலின்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி.சேகர், கடந்த ஏப்ரல் மாதம் பெண் பத்திரிகையாளர்கள்குறித்து அவதூறாகத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டது பெரும் சர்ச்சையாக மாறியது. இவரின் கருத்துக்கு பத்திரிகையாளர்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். எஸ்.வி.சேகரை கைதுசெய்யக் கோரி, பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இவர்மீது பல காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அதை எதிர்த்து தனக்கு ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அவர்மீது முகாந்திரம் இருந்தால் கைது செய்யலாம் என நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், எஸ்.வி.சேகர் தலைமறைவானார். ஆனால், தற்போது அவர் போலீஸ் பாதுகாப்புடன் வெளியில் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை 
ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இது பற்றி இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில் பேச தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின்,” பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறான கருத்து பதிவிட்ட  எஸ்.வி. சேகரை கைதுசெய்ய அனுமதி இருந்தும், இந்த அரசு அவரைக் கைது செய்யத் தயங்குகிறது. அவர், தலைமைச்செயலாளரின் உறவினர் என்பதால், போலீஸ் பாதுகாப்புடனே வெளியில் சென்றுவருகிறார். மத்திய அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் இவரும் பங்கேற்கிறார். கடந்த வாரம் நடைபெற்ற தென்னிந்திய தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தானும் சின்னத்திரை நடிகர் என்ற முறையில் நேரில் சென்று வாக்களித்துள்ளார். தேர்தல் நடக்கும் இடத்தில் பல காவல்துறை உயர் அதிகாரிகளும் இருந்துள்ளனர். ஆனால், எஸ்.வி.சேகரை யாரும் கைதுசெய்யவில்லை. இதைப் பற்றி இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் பேசியபோது, சபாநாயகர் எங்களைப் பேச விடாமல் தடுத்து நிறுத்தினார். மீண்டும் இதுகுறித்துப் பேச எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இதைக் கண்டித்து, தி.மு.க-வினர் அனைவரும் வெளிநடப்பு செய்தோம்” எனப் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!