வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (13/06/2018)

கடைசி தொடர்பு:15:20 (13/06/2018)

மாட்டுவண்டி உரிமையாளர்கள் சங்கச் செயலாளரின் உயிரைப் பறித்தது வறுமை!

தனது குடும்பம் உணவு மற்றும் தனது மகன் சுபாஷ் (19) (மாற்றுத் திறனாளி), மகள் அனுசியா (17) இருவரின் படிப்புக்குக்கூட பணம் கட்ட முடியாமல் கஷ்டப்பட்டு வந்திருக்கிறார். அதோடு, தனது கால்நடைகளுக்குத் தீவனம்கூட வாங்க வழியில்லாமல் மிகவும் சிரமப்பட்டுவந்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில், மாட்டுவண்டியில் மணல் அள்ள தடை போட்டதால், மனமுடைந்த மாட்டுவண்டி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் சுப்புரத்தினம் தற்கொலைசெய்துகொண்ட சம்பவம், சோகத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டு வண்டி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சுப்புரத்தினம்

கரூர் மாவட்டம் மண்மங்கலம் ஒன்றியத்தில் இருக்கிறது புஞ்சை தோட்டக்குறிச்சி. அந்த ஊரைச் சேர்ந்தவர், ரா.சுப்புரத்தினம். மாட்டு வண்டிமூலம் காவிரி ஆற்றில் மணல் எடுத்து விற்பனை செய்துவந்தார். மாட்டுவண்டி உரிமையாளர்கள் சங்கச் செயலாளராகவும் இருந்த இவர், தனது சிறிய வயதிலிருந்து கடந்த 40 ஆண்டுகளாக சுய தொழிலான மாட்டுவண்டியில் மணல் எடுத்துச்சென்று விற்பனைசெய்யும் தொழிலைச் செய்துவந்தார் (ஒரு மணல் வண்டியின் விலை, ரூ.150-200 வரை விற்ற காலத்திலிருந்து இத்தொழிலைச் செய்துவந்தாராம்). தற்போது, தமிழ்நாடு அரசு மாட்டுவண்டியில் மணல் அள்ள போட்ட தடை உத்தரவால், கடந்த 6 மாத காலத்துக்கும் மேலாக மணல் வண்டிகளில் மணல் அள்ளப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அன்றாட வாழ்க்கையை வாழ முடியாமல் மிகவும் மனமுடைந்து சிரமப்பட்டுள்ளார் சுப்புரத்தினம். இந்த நிலை மேலும் மேலும் நீடித்ததாலும், தனது குடும்பத்துக்கு உணவு மற்றும் தனது மகன் சுபாஷ் (19) (மாற்றுத் திறனாளி), மகள் அனுசியா (17) இருவரின் படிப்புக்குகூட பணம் கட்ட முடியாமல் கஷ்டப்பட்டுவந்திருக்கிறார். அதோடு, தனது கால்நடைகளுக்குத் தீவனம்கூட வாங்க வழியில்லாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அவர்,  நேற்று மதியம் 12.30 மணியளவில் தனது உயிரை (தூக்கிட்டு) மாய்த்துக்கொண்டதால், அவரது குடும்பம் மிகவும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதுபற்றி, நம்மிடம் பேசிய அந்தப் பகுதி மாட்டுவண்டி உரிமையாளர்கள்,  "நீதிமன்றங்களோ, அரசின் விதிகளோ உள்ளூர் தேவைகளுக்கு மாட்டுவண்டிகளில் மணல் அள்ள தடை இல்லைனுதான் சொல்லியிருக்கின்றன. ஆனால், மணல்குவாரிகள் அமைத்து, பொக்லைன் இயந்திரங்கள்மூலம் மணல் அள்ளப்படுவதைத்தான் நீதிமன்றங்கள் எதிர்க்கின்றன. ஆனால், அதையும் மீறி தமிழக அரசு ஏற்கெனவே எட்டு இடங்களில் மணல் குவாரிகள் அமைத்து, காவிரி ஆற்றின் மணலைச் சுரண்டின. இப்போதும், மாயனூர் உள்ளிட்ட இரண்டு இடங்களில் மணல் குவாரிகளை அமைத்து, விதிகளை மீறி மணல் அள்ளிவருகிறது. ஆனால், கடந்த 6 மாதமாக மாட்டுவண்டிகளில் மணல் அள்ளும் எங்களுக்குத் தடை போட்டுட்டாங்க. இதனால், ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அப்படி வருமானம் இழந்ததால்தான் குடும்பம் நடத்த வழியில்லாத விரக்தியில் சுப்புரத்தினம் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். தமிழக அரசு, உடனே எங்களுக்கு மணல் அள்ள அனுமதி வழங்கணும். இல்லைனா, இந்தச் சாவு எண்ணிக்கை இன்னும் கூடும்" என்று எச்சரித்தார்கள்.