வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (13/06/2018)

கடைசி தொடர்பு:15:50 (13/06/2018)

`மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்துவேன்’ - மதுரையின் புதிய போலீஸ் கமிஷனர் உறுதி

மதுரை மாநகரக் காவல்துறை ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால்

மதுரை மாநகரக் காவல்துறை ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால், சி.பி.சி.ஐ.டி-யின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு ஐ.ஜி-யாகப் பணி மாறுதலாகிச் செல்வதால், அவர் பொறுப்பு வகித்த ஆணையர் பொறுப்பில் டேவிட்சன் தேவாசீர்வாதம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஏற்கெனவே மதுரையில் இணை ஆணையராகப் பணியாற்றியவர் என்பதால் மதுரை மக்களுக்கு அறிமுகமானவர். பொறுப்பேற்றுக் கொண்டு செய்தியாளர்களிடம் பேசியவர், "மதுரை மாநகரின் சட்டம் ஒழுங்கை காப்பதிலும், குற்றச் செயல்களைக் குறைப்பதிலும், மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நல்லுறவு ஏற்படுத்தப்படும்'' என்றார்.

மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம்


 இவர் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தென்மண்டல ஐ.ஜி-யாக சண்முக ராஜேஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டார். தூத்துக்குடி கலவரத்தைச் சரியாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டில் ஐ.ஜி-யாக இருந்த சைலேஷ்குமார் யாதவ் சென்னை ஆயுதப்படை ஐ.ஜி-யாக மாற்றப்பட்ட நிலையில் அவருக்குப் பதிலாகச் சண்முகராஜேஸ்வரன் இன்று தென் மண்டல ஐ.ஜி-யாகப் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றவுடன், தென் மாவட்ட டி.ஐ.ஜி-க்கள், எஸ்.பி-க்களுடன் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் பற்றி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க