வெளியிடப்பட்ட நேரம்: 15:19 (14/06/2018)

கடைசி தொடர்பு:15:21 (14/06/2018)

ப்ளஸ் 1, ப்ளஸ் டூ வில் மொழிப்பாடத் தேர்வில் புதிய முறை! மாணவர்களுக்குச் சாதகமானதா? ஓர் அலசல்

ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ ஆகிய வகுப்புகளுக்கு மொழிப் பாடத்தில் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என்கிற வழக்கமான தேர்வு நடைமுறையில் மாற்றம் கொண்டுவந்துள்ளது தமிழக அரசு. அதாவது , `இனி , மொழிப் பாடங்கள் ஒரே தேர்வாக நடைபெறும்' என அறிவித்துள்ளது. இந்தப் புதியமுறை மாணவர்களுக்குச் சாதகமானதுதானா? ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள் ?

ப்ளஸ் ஒன்

ஶ்ரீ.திலீப், ஆசிரியர். 

dhileep ``மொழிப் பாடங்களில் இரண்டு தாள்கள் இருப்பதால் மாணவர்கள் எளிமையாகத் தேர்ச்சிபெற்றுவிடலாம் என நினைப்பார்கள். ஆனால், இரண்டு தாள்களிலும் தனித் தனியாக, மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்  எடுக்கின்றனரோ, அம்மதிப்பெண்ணை அப்படியே போடும்போது ஒரு மதிப்பெண் குறைந்தாலும் மாணவர்கள் தோல்வியடையும் நிலை இருந்தது. இனி, ஒரே தேர்வு என மாறுவதால், ஒரு மதிப்பெண்ணில் தோல்வி அடையும் வாய்ப்பு குறையும். 11 மற்றும் 12-ம் வகுப்பு அறிவியல் மற்றும் கணிதப் பாடத்திட்டங்கள், மாணவர்களின் போட்டித் தேர்வுகளுக்கு உதவியாக இருக்கும். ஆனால், மொழிப் பாடங்கள் 200 மதிப்பெண்ணுக்கு வைக்கும்போது, அதற்காக அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தது. இனி, மொழிப் பாடத் தேர்வுகள் 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்படுவதால் நேரத்தை மிச்சப்படுத்தலாம் .

அதேநேரம், மொழி ஆசிரியர்கள் இரண்டு தாள்கள் கேட்டதன் காரணம், மொழி சார்ந்த நிறைய விஷயங்களை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றுதான். மதிப்பெண்ணில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம், பாடத்திட்டங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. வினாத்தாள்களில் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளைத் தவிர்த்து, புதிய கேள்விகள் கேட்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மதிப்பெண் குறைப்பு ஏற்பட்டிருப்பதால், மாணவர்களிடையே மொழிப் பாடங்களுக்கான முக்கியத்துவம் குறைவாகத்தான் இருக்கும். எல்லா துறைகளிலும் மொழிசார்ந்த அறிவு தேவைப்படுகிறது. இந்த மதிப்பெண் குறைப்பு திட்டத்தினால் மாணவர்களுக்கிடையே மொழி பற்றிய பரந்த சிந்தனை குறையலாம். இதனால், கடைசி நேரத்தில் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், ஆரம்பத்திலிருந்தே படிக்கவேண்டிய கட்டாயத்துக்கு உட்படுகிறார்கள். காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எழுதிப் பழகுவதால், புதிய தேர்வுமுறை மாணவர்களுக்கு எளிமையாக இருக்கும். ஆனால், மொழிப் பாடங்களுக்கிடையேயான விடுமுறை குறைய வாய்ப்பிருக்கிறது.

11 மற்றும் 12 -ம் வகுப்புகளில் இலக்கணத்துக்கு (Grammar) முக்கியத்துவம் கொடுப்பதைவிடத் தொடர்புகொள்ளலுக்குத்தான் (Communication) அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இதனால், மாணவர்கள் நிறைய மதிப்பெண் எடுக்க வாய்ப்பிருக்கிறது. மற்ற ஆசிரியர்கள் பத்தாம் வகுப்புக்கும் எப்போது இந்த மாற்றம் வரும் எனக் காத்திருக்கின்றனர். இதனால், ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் இந்தப் புதிய மாற்றத்துக்கு வரவேற்பு உள்ளது ."

என் .மாதவன், ஆசிரியர்  

madhavan ``மாணவர்களின் மொழி சார்ந்த அறிவைத் தேர்வுவைத்து நாம் தெரிந்துகொள்ள முடியாது. ஒரு மொழியியலில் ஆர்வம் உள்ளவனாக நான் சொல்வது இதுதான். மாணவர்கள் இயல்பாக மொழியைக் கற்கும்போதுதான் அதில் ஆளுமை வெளிப்படும். மூன்று மணி நேரத்துக்குத் தேர்வில், மொழி வளர்ச்சியை அளவிடும் முறை மன அழுத்தத்தையே ஏற்படுத்தும். இந்தப் புதிய தேர்வு மாற்றம் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும். அதேநேரம், ஆசிரியர்கள் நிறைய விஷயங்களைத் தவிர்ப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. இது ஒரு முக்கியமான விஷயம். இதை ஈடு செய்ய, இலக்கிய மன்றத்தில் போட்டிகள் நடத்துவது மாணவர்களுக்கிடையே மொழி வளர்ச்சியைத் தூண்டும். மாணவர்களின் மொழி அறிவை வளர்த்தெடுக்க இன்னும் பல்வேறு நடைமுறைகளை அரசு முன்னெடுக்க வேண்டும். மேலும், அரசுப் பள்ளிக்கூடங்களில் கருத்தரங்குகள், நூலகங்களில் புத்தகங்கள் வாசித்தல், பேச்சுப் போட்டிகள், எழுத்துப் போட்டிகள், தனித்திறமைகளை ஊக்குவித்தல் இவற்றுக்கும் மதிப்பெண் வழங்குதல் மூலம் மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்தலாம்."


டிரெண்டிங் @ விகடன்