`உண்மையான அ.தி.மு.க இதுதான்’ - தீபாவுக்கு குட்பை சொன்னவர் புதிய கட்சித் தொடக்கம்

``எடப்பாடியின் அரசு பி.ஜே.பி-யின் வழியில் செல்வதால் திராவிட சிந்தனையுள்ள, தமிழ் பற்றுள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழி வந்த தொண்டர்கள் தவித்துப் போயுள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து உண்மையான அ.தி.மு.க இதுதான் என்பதைக் காட்டுவதற்காக இக்கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

`அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்' என்ற புதிய கட்சியை, அ.தி.மு.க தொழிற்சங்கத்தில் மாநில நிர்வாகியாக இருந்த பசும்பொன் பாண்டியன் இன்று மதுரையில் தொடங்கினார். இவரும்,  இந்தக் கட்சியில் உள்ள நிர்வாகிகளும் சில மாதங்களுக்கு முன்பு வரை ஜெ.தீபாவுக்கு பின்னால் இருந்தார்கள் என்பது முக்கியமானது. 

பசும்பொன் பாண்டியன்


 மதுரை மகபூபாளையத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இதில் கட்சியின் பெயரும் கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவரின் அண்ணன் மகள் ஜெ.தீபா கட்சியை வழி நடத்த வேண்டும் என்று பசும்பொன் பாண்டியன் உட்பட பல கட்சி நிர்வாகிகள் அவர் பின்னால் சென்றனர். `அ.தி.மு.க ஜெயலலிதா அணி' என்ற பெயரில் செயல்பட்டு வந்தவர்கள், கட்சியில் உரிமை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த நிலையில், தீபாவுக்கும் பசும்பொன் பாண்டியனுக்கும் லடாய் ஏற்பட, அனைவரும் வெளியேறினர். அதற்குப்பின் தீபா தனியாகப் பேரவை தொடங்கினார்.

`அ.தி.மு.க ஜெயலிதா அணி' என்ற பெயரில் செயல்பட்டு வந்த பசும்பொன் பாண்டியன், இன்று அதைத் தனிக்கட்சியாக அறிவித்துள்ளார். ''எடப்பாடியின் அரசு பி.ஜே.பி-யின் வழியில் செல்வதால் திராவிட சிந்தனையுள்ள, தமிழ் பற்றுள்ள, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழி வந்த தொண்டர்கள் தவித்துப்போயுள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து உண்மையான அ.தி.மு.க இதுதான் என்பதைக் காட்டுவதற்காக இக்கட்சி தொடங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் இக்கட்சியின் மாநாடு பிரமாண்டமாக நடைபெறும்'' என்று அறிவித்தார் பசும்பொன் பாண்டியன். ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அ.தி.மு.க-விலிருந்து புதுசு புதுசாகக் கட்சிகள் வந்துகொண்டே இருக்கின்றன.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!