வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (13/06/2018)

கடைசி தொடர்பு:16:00 (13/06/2018)

`அந்த அமைச்சரின் அறைக்குக்கூட நான் போனதில்லை!’ - தகிக்கும் விஜயதரணி

`150 காவலர்கள் சேர்ந்துகொண்டு என்னை வெளியேற்றினார்கள். சட்டமன்றம் இனி பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை' எனக் கவலையோடு பேசுகிறார் விஜயதரணி. 

விஜயதரணி

ன்று சட்டமன்ற நடவடிக்கையில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி பங்கேற்கவில்லை. காரணம், நேற்று அவைக்காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதால் உடல்நலக் குறைவுக்கு ஆளாகியிருக்கிறார். `150 காவலர்கள் சேர்ந்து கொண்டு என்னை வெளியேற்றினார்கள். சட்டமன்றம் இனி பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை' எனக் கவலையோடு பேசுகிறார் விஜயதரணி. 

சட்டமன்றத்தில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் தொகுதி பிரச்னைகள் தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானங்களை முன்வைத்து எம்.எல்.ஏ-க்கள் பேசினர். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி, `என் தொகுதியில் மின்சாரம் தாக்கி இறந்துபோன மூன்று பேருக்கு இழப்பீடு அளிப்பது தொடர்பாகப் பேச வேண்டும்' எனக் கூற, அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார் விஜயதரணி. ``என்னை தகுதிநீக்கம் செய்வதற்கான வேலையையும் சபாநாயகர் மேற்கொள்ளலாம். சட்டரீதியாக எதையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்" என ஆதங்கத்தோடு நம்மிடம் பேசத் தொடங்கினார் விஜயதரணி.

``அ.தி.மு.க பக்கமோ தி.மு.க பக்கமோ எந்தச் சார்பு நிலைப்பாட்டையும் நான் எடுக்கவில்லை. எங்கள் கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அதைத்தான் செயல்படுத்துவோம். அதேநேரம், இந்த அரசு எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளுக்கு நல்ல பதிலையே சொல்கிறார்கள். அனைவருக்கும் தேவையானதை அறிவிக்கிறார்கள். நேற்று நடந்த விவாதத்தில், சபாநாயகர் என்மீது ஏன் கோபப்பட்டார் எனத் தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே நான் பேசுவதற்கு அவர் அனுமதியளிக்கவில்லை. என் தொகுதியில் மின்சாரம் தாக்கி இறந்துபோன மூன்று பேருக்கு இழப்பீடு கோரி, அவையிலேயே அமைச்சருக்கு மனு கொடுத்திருந்தேன். `இறந்தவர்களுக்குத் துறைரீதியான இழப்பீடு
2 லட்சம், முதல்வர் இழப்பீடு 3 லட்சம் என மொத்தம் 5 லட்சம் தரலாம்' என முடிவெடுத்திருந்தார்கள். இதுகுறித்து அவையில் பேசுவதற்கு அனுமதி கேட்டிருந்தேன். ஆனால், சபாநாயகர் மறுத்துவிட்டார். 

சபாநாயகர் தனபால் நானும் தொடர்ந்து, `அமைச்சரும் இழப்பீட்டை அறிவிப்பதாக இருக்கிறார். நாம் இப்போது பேசும் நேரத்துக்குள் அறிவிப்பை வெளியிட்டுவிடலாம். அவையின் நேரமும் வீணாகப்போவதில்லை. மைக்கைக் கொடுங்கள்' எனச் சொன்னேன். இதை எதிர்பார்க்காத சபாநாயகர், `ரொம்ப ஓவரா பேசுறீங்க... அமைச்சரும் நீங்களும் தனிப்பட்ட முறையில் செய்துகொள்வதையெல்லாம் இங்கு செயல்படுத்தக் கூடாது’ எனக் கூறிவிட்டு, அவர் சிரித்த சிரிப்பும் பாடி லாங்குவேஜும் மிகக் கொடுமையாக இருந்தது. அந்த அமைச்சரும், `அந்த உறுப்பினர் நேற்று கடிதம் கொடுத்தார். நாங்களும் பதில் சொல்லத் தயாராக இருக்கிறோம். நீங்கள் அனுமதித்தால் பேசுகிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கும் அந்த உறுப்பினருக்கும் எதுவும் கிடையாது' எனக் கூறிவிட்டார். இதன்பின்னர், என்னை வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர். உடனே, என் அருகில் வந்த 150 பெண் காவலர்கள், என்னுடைய புடவையை இழுத்து, கையில் கீறிவிட்டனர். முழங்கையே வீங்கிவிட்டது. கையைத் தூக்கவே முடியவில்லை. மருத்துவமனையில் ஊசி போட்டுவிட்டு வந்திருக்கிறேன்" என்றவர், ``அந்த அமைச்சரின் அறைக்குக்கூட நான் போனதில்லை. எந்த அமைச்சரையும் பார்ப்பதற்கு எனக்கு எந்தத் தடையும் கிடையாது. அந்த அமைச்சர் பெயர் தங்கமணியா... வேலுமணியா என்றுகூடத் தெரியாது" என்றார் ஆதங்கத்துடன். 

விஜயதரணி - சபாநாயகர் மோதல் குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க முக்கிய நிர்வாகி ஒருவர், "விளவங்கோடு தொகுதிக்குத் தேவையான நலத்திட்டங்களை ஆளும்கட்சியின் உதவியோடு பெற்றுக் கொண்டிருக்கிறார் விஜயதரணி. சட்டசபையில் ஜெயலலிதா படம் திறந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் எதிர்த்தபோது, `ஒரு பெண் அரசியல் தலைவர் என்ற அடிப்படையில் ஜெயலலிதா படத்தைத் திறப்பதில் என்ன தவறு' எனப் பேசினார் அவர். இந்தக் கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் புயலைக் கிளப்பியது. ஆளும்கட்சியோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சிலர், இணக்கமாக இருக்கிறார்களோ என்ற சந்தேகம் தி.மு.க-வுக்கும் இருக்கிறது. அதேநேரம், எடப்பாடி பழனிசாமியோடு சபாநாயகர் முரண்பட்டு வருவதாகவும் அமைச்சர்கள் பேசிக்கொள்கின்றனர். கடந்த இரண்டு நாள்களாகச் சபையில் எடுத்துக்கொள்ளப்படும் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் எல்லாம், எடப்பாடி பழனிசாமியைக் குறிவைத்தே எடுக்கப்படுவதாக அறிகிறோம். சேலம் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் விவகாரம், பசுமை வழிச்சாலை என இரண்டுமே எடப்பாடி பழனிசாமி தொகுதிக்குட்பட்ட பணிகள். முதல்வரை சங்கடத்தில் ஆழ்த்துவதற்காக இந்தக் கவன ஈர்ப்புத் தீர்மானங்களைச் சபாநாயகர் எடுத்துக்கொள்வதாகப் பேசுகின்றனர். 

பொதுவாக, அவையில் எடுக்கப்படும் இந்தத் தீர்மானங்கள் குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கும் தகவல் சொல்லப்படும். அப்படிச் சொல்லியிருந்தால் காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, தி.மு.க-வுடன் இணைந்து செயல்பட்டிருப்பார். ஆனால், டி.டி.வி தரப்புக்குத் தி.மு.க மூலமாகத் தகவல் போகிறது. இந்தத் தீர்மானங்களைப் பற்றி ஸ்டாலின், துரைமுருகன், டி.டி.வி ஆகியோர் மட்டுமே பேசுகின்றனர். காங்கிரஸை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. `தி.மு.க-வுக்கும் தினகரனுக்கும் ஆதரவான நிலையில் சபாநாயகர் செயல்படுகிறாரோ' எனக் கொங்கு எம்.எல்.ஏ-க்கள் நினைக்கின்றனர். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்திருக்கும் வேளையில், சபாநாயகரின் செயல்பாடுகள் அமைச்சர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆளும்கட்சி ஆதரவான நிலையில் செயல்படும் விஜயதரணிமீது கோபத்தை வெளிப்படுத்தியதும் இதன் ஓர் அங்கம்தான்" என்றார் விரிவாக.