``என்ன சொல்றீங்க... இன்னைக்கு விஷ்ணுபிரியாவுக்குப் பொறந்தநாளா?” - கலங்கும் தந்தை | “Is today My Daughter's birthday?” - abashed DSP Vishnupriya's Father

வெளியிடப்பட்ட நேரம்: 16:08 (13/06/2018)

கடைசி தொடர்பு:16:08 (13/06/2018)

``என்ன சொல்றீங்க... இன்னைக்கு விஷ்ணுபிரியாவுக்குப் பொறந்தநாளா?” - கலங்கும் தந்தை

``பிரியாங்கற பெயரை எங்கே கேட்டாலும் சிலை மாதிரி நின்னுடறேன். ரோட்டுல போலீஸ் ஜீப் போச்சுன்னா, கண்ணு வெறிக்க பார்க்கிறேன். காலையில் கடைக்குப் போய் பேப்பர் வாங்கினப்போதான் இன்னிக்கு அமாவாசைன்னு தெரிஞ்சது. வீட்டுக்கு வந்து மனைவிகிட்ட சொன்னதும், ரெண்டு காதுகளையும் பொத்திட்டு அலறி அடிச்சு ரூமுக்குள்ள ஓடிப்போய்ட்டாங்க. `அமாவாசை அன்னிக்கு இறந்துபோன ஆத்மாவுக்குத் தீபம் ஏற்றி வழிபடணும். வெளியே வாம்மா'னு ரொம்ப நேரமா கெஞ்சினேன். `என் பொண்ணு என்னைவிட்டு எங்கேயும் போகலே. அவள் சாகலை. கூடவேதான் இருக்கா. அமாவாசை, படையல்னு சொல்லி என்னைய சாகடிக்காதீங்க ரவி'னு கதறினா. நீங்க போன் பண்ணினதுக்கு அப்புறம்தான் பிரியாவுக்குப் பிறந்தநாளுங்கிற விஷயமே தெரியுது. ஆமாங்க, ஜூன் 13...  இந்தப் பாவி பொண்ணோட பிறந்தநாளையே மறந்துப் போயிட்டானே. அம்மாடி, உன் டாடியை மன்னிச்சுடுடா தங்கம். உன் செல்ல ரவியப்பாவை மன்னிச்சுடுடா கண்ணு” என்கிற அழுகுரல் உலுக்கிப் போடுகிறது.

DSP Vishnupriya

2015-ம் ஆண்டு... இன்ஜினீயரிங் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்துவந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தமிழ்நாட்டையே பதறவைத்தது. அவர் தற்கொலைக்கான காரணம் தற்போதுவரை வெளிச்சத்துக்கு வராமலேயே இருக்கிறது. நேர்மையான அதிகாரி, மணல் கொள்ளையைத் துணிச்சலுடன் தடுத்தவர், ஏ.டி.எம் கொள்ளையைக் கண்டுபிடித்தவர் எனப் பல சவாலான களங்களில் தன்னை முன்னிறுத்திக்கொண்ட விஷ்ணு பிரியாவின் பிறந்தநாள் இன்று. எனவே, அவர் குடும்பத்தினரோடு பேசியபோதுதான் இந்தக் கதறல். பாதியிலேயே தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார் தந்தை ரவி. சில நிமிடங்களுக்குப் பிறகு அவரே அழைத்துப் பேச ஆரம்பித்தார்.

``ஸாரி சார், வீட்டுக்குள்ளே இருந்தேன். பிரியாவின் பிறந்தநாள் எனத் தெரிஞ்சதும் துக்கத்தை அடக்க முடியலை. ஏற்கெனவே அவள் படத்துக்குத் தீபம் போட அழைச்சதுக்கு என் மனைவி உள்ளே போய் கதவை அடைச்சுக்கிட்டாங்க. பிறந்தநாள் எனத் தெரிஞ்சா உடைஞ்சுப் போயிடுவா. அதான் வெளியில் வந்து பேசறேன்” என்றவர், மகளுடனான நினைவலைகளைப் பகிர்கிறார். 

``என் அப்பா சுதந்திரத்துக்கு முன்னாடியே காவல்துறையில் சேர்ந்தவர். என் மனைவியின் அப்பா ராணுவத்தில் இருந்தவர். நானும் அரசு வேலையில்தான் இருக்கேன். கலெக்டரேட்ல 10 வருஷத்துக்கும் மேலே வேலை பார்த்தேன். சின்ன வயசுலயே விஷ்ணு பிரியாவின் நடவடிக்கைகளைப் பார்த்து, `நீ வருங்காலத்துல கலெக்டராவோ, ஐ.பி.எஸ். அதிகாரியாகவோ வரணும். அதுதான்மா நம்ம குடும்பத்துக்குப் பெருமை'னு சொல்லி சொல்லி வளர்த்தேன். பிரியாவும் ரொம்ப பிரில்லியன்ட். குரூப் 2 தேர்வை இரண்டு முறை பாஸ் பண்ணினா. குரூப் 1 தேர்வும் எழுதியிருந்தாள். ஷேக்ஸ்பியர் இங்கிலீஷ் அகாடெமியில் ரெண்டு முறை விருது வாங்கின பொண்ணு. குரூப் 2 வேலை வாங்கி செட்டில் ஆகியிருக்கலாம். ஆனாலும், `என் திறமைக்குக் காவல்துறையில்தான் வேலை பார்ப்பேன்'னு பிடிவாதமா டி.எஸ்.பி வேலையைத் தேர்ந்தெடுத்தாள்.

விஷ்ணுப்பிரியாவின் குடும்பம்

சிவகங்கையில் இருக்கும்போதே திறமையான அதிகாரி எனப் பேர் வாங்கினாள். திருச்செங்கோட்டிலும் அப்படித்தான். பொண்ணோட திறமையைப் பார்த்து பார்த்துப் பூரிச்சுட்டிருந்தேன். பொண்ணுக்குக் காலாகாலத்துல கல்யாணம் பண்ணிவைக்கணும்னு என் மனைவி சொன்னாள். பிரியாவிடம், `அம்மாவும் அப்பாவும் உன் கல்யாணம் பற்றி பேசிட்டிருக்கோம். நீ யாரையாவது லவ் பண்றியா?னு கேட்டேன். `அதெல்லாம் இல்லைப்பா. நீங்களே ஏற்பாடு பண்ணுங்க'னு சொன்னாள். அப்புறம்தான் மேட்ரிமோனியில் பதிவுபண்ணினோம். கல்யாணம், குடும்பம் கனவுகளைவிட, வேலையில் பெருசா சாதிக்கணும் என்கிற கனவுதான் அவளுக்கு அதிகம். தங்கச்சி திவ்யாவை நல்லா படிக்கவைக்கணும். அப்பா, அம்மாவை நல்லா பாத்துக்கணும் என்கிற எண்ணமும் அதிகம்” என்றவர், சில நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு, தழுதழுத்த குரலில் தொடர்கிறார்.

``பிரியா கொஞ்சம் குண்டா, கறுப்பா இருப்பா சார். அவள் திறமைகளையும் அதிரடி நடவடிக்கைகளையும் பொறுத்துக்காத உயர் அதிகாரிங்க, அவள் உருவத்தைக் கிண்டல் பண்ணி நிலைகுலைய வைப்பாங்க. ஆனாலும், அதையெல்லாம் பெருசா எடுத்துக்காம வேலையில் கவனமா இருப்பா. அந்த எஸ்.பி, என் பொண்ணை வெறுப்பேத்தறதிலேயே குறியா இருந்திருக்கார். சோத்து மூட்டை, குண்டு காக்கா என ஏதேதோ சொல்லி அசிங்கப்படுத்திட்டே இருந்திருக்கார். பாப்பா ஒருகட்டத்துக்கு மேலே மனசு ஒடஞ்சுட்டா. இப்பவும் என்னால் தெளிவா சொல்லமுடியும். என் பொண்ணு தற்கொலை பண்ணிக்கிற அளவுக்குக் கோழை கிடையாது. அந்த எஸ்.பி கொடுத்த நெருக்கடிதான் அந்தச் சூழலுக்குத் தள்ளியிருக்கு. அவள் உருவம் அப்படி அமைஞ்சதுக்கு என்னப்பா பண்ண முடியும். ஹார்மோன் பிரச்னையால் எத்தனையோ குழந்தைகள் குண்டா இருக்காங்க. 

விஷ்ணுப்பிரியா சிறுவயதில்

ஒரு வாரத்துக்கு முன்னாடி ஜிப்மர்ல அட்மிட் ஆகியிருந்த என் நண்பனின் பொண்ணைப் பார்த்துட்டு வந்தேன். 18 வயசுலேயே 100 கிலோ எடை போட்டிருக்கு. அதுக்காக, அந்தப் பொண்ணை ஒதுக்கலாமா? காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே. என் பொண்ணை கிண்டலடிச்ச எல்லோருக்கும் ஒரு காலம் வரும். நம்ம பெரியவங்க சும்மாவா சொல்லியிருக்காங்க. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்னு. என் பொண்ணோட மரணத்துக்குக் காரணமானவங்க ஒவ்வொருத்தருக்கும் தண்டனை கிடைச்சே தீரும். இன்னைக்கு என் மனைவி பித்துப்பிடிச்சவ மாதிரி இருக்கா. ரெண்டாவது பொண்ணும் அக்காவை நினைச்சு அழாத நாளே இல்லை. இன்னைக்கு வரை ஒவ்வொரு நாளும் மரண வேதனையை அனுபவிச்சுட்டிருக்கோம். ஏதாவதொரு ரூபத்துல அந்தத் தெய்வம் வந்து அவங்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கும்; கொடுக்கணும்” என்றவர்...

''இன்னைக்கு பிரியாவுக்குப் பிறந்தநாளுங்கிற விஷயத்தை என் மனைவியிடம் சொல்லப்போறதில்லை. மகளை மறக்கமுடியாதுன்னாலும், இந்த மாதிரியான நாள்களையாவது மறைச்சுத்தான் ஆகணும். அதுதான் என் மனைவி உடம்புக்கும் மனசுக்கும் நல்லது. என் பொண்ணு பிறந்தநாளை ஞாயாபகப்படுத்தினதுக்கு நன்றி” என வேதனையுடன் தொலைபேசியைத் துண்டிக்கிறார் ரவி.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close