`சின்னச் சின்ன விஷயங்கள்தாம் என்னை ஈர்க்கின்றன' - இயல் விருது பெற்ற வண்ணதாசன் நெகிழ்ச்சி

`சின்னச் சின்ன விஷயங்கள்தாம் என்னை ஈர்க்கின்றன. பிரமாண்டமான நயாகரா அருவியில் நான் கண்டது உயரமாகப் பறந்த சிறிய பறவையைத்தான்"- 'இயல் விருது'விழாவில் வண்ணதாசன்

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், ஒவ்வோர் ஆண்டும் தமிழ் இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றிய ஆளுமைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் ( இயல் விருது ), அந்த ஆண்டு வெளியான தமிழின் சிறந்த புனைவு, அபுனைவுக்கான விருதும் வழங்கிவருகிறது. 2017-ம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதுகள் வழங்கும் விழா கனடாவில் ஜூன் 10-ம் தேதியன்று  நடைபெற்றது.

இயல் விருது


விழாவில் `தமிழ் இலக்கியத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது'  எழுத்தாளர் வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது. Water திரைப்படத்தின் இயக்குநர் தீபா மேத்தாவும், மற்றும் நியூ யோர்க் ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிய முனைவர் பாலா சுவாமிநாதனும் விருதினை வழங்கினர். வண்ணதாசனின் ஏற்புரை சுருக்கமாகவும் அடர்த்தியானதாகவும் அமைந்தது. `சின்ன சின்ன விசயங்கள்தாம் என்னை ஈர்க்கின்றன. பிரமாண்டமான நயாகரா அருவியில் நான் கண்டது உயரமாகப் பறந்த சிறிய பறவையைத்தான். நான் சின்ன சின்ன விசயங்களால் ஆன மனிதன்’ என்று சபையோரின் பலத்த கைதட்டல்களுக்கிடையே வண்ணதாசன் உரையாற்றினார்.

விழாவில் வண்ணதாசனின் `அந்தரப்பூ’ கவிதை தொகுப்பு வெளியிடப்பட்டது. பேராசிரியர் சொர்ணவேல் வெளியிட அதை  எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பெற்றுக்கொண்டார். வண்ணதாசன் தவிர, புனைவுக்காக எழுத்தாளர் தமிழ்மகனும், அபுனைவிற்கான விருதினை பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பியும் பெற்றனர். மொழியெர்ப்பிற்கான விருதினை அரவிந்தன் பெற்றார். இவர்கள் தவிர பா.அகிலன், அனுக் அருட்பிரகாசம், சசிகரன் பத்மநாபன், கவிஞர்.செழியன், தி.ஞானசேகரன், கலாநிதி நிக்கோலப்பிள்ளை சவேரி உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன. கல்வியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!