வெளியிடப்பட்ட நேரம்: 17:22 (13/06/2018)

கடைசி தொடர்பு:17:22 (13/06/2018)

எஸ்.வி.சேகருக்குக் கிடைத்த வாய்ப்பு எனக்குக் கிடைக்குமா? பாமரனின் ஆதங்கம்

எஸ்.வி.சேகர் போல பாதுகாப்பாக இருக்கக் கோரும் ஒரு பாமரன் எழுதியுள்ள கடிதம்தான் இது ! 

``அய்யா எல்லோருக்கும் மொத்தமா வணக்கஞ் சொல்லிக்கிறேஞ்சாமீ ! எம்பேரு கொமரப்பன். சொந்த ஊரு கொமாரபாளையம். அஞ்சாப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். சின்னப் புள்ளையிலேயே பெத்தவங்களோடு மெட்றாஸுக்கு வந்துட்டேஞ்சாமீ. இங்கியே கல்யாணம் காட்சின்னு ஆகி, நாலஞ்சு புள்ளைங்களும் இருக்குது. வானம்பாத்த பூமியா ஊர்நாடு ஆகிப்போனதுல அங்க வெவசாயமே இல்லாமப் போச்சு. காஞ்சிபோன பூமிதானேன்னு நாங்களும் ஊர்ப்பக்கம் போகாம இங்கியே இருந்திட்டோம். போன வாரத்துல பெரிய அண்ணன் மவன் துலுக்காணம் கடுதாசி போட்டிருந்தான். பங்காளி மவனுங்க எடத்தை சுகர் பேக்ட்டரி காரனுங்களுக்கு அளந்து கிட்டிருக்காங்க... சீக்கிரம் பொறப்பட்டு வாங்கன்னு சுருங்குனா மாதிரி கடுதாசில வெவரத்தைச் சொல்லிட்டான்.

எஸ்.வி.சேகர்

ஊர்ப்பக்கம் நானும், என் மவங்களும் ஒரு எட்டு போய்ப் பாத்துட்டு வரலாம்னு இருக்கோஞ்சாமீ. நாங்க எதுக்கோசரம் வந்திருக்கோம்னு எப்படியும் பங்காளி மவன்களுக்குத் தெரிஞ்சுடும். அருவா, கம்பு, கட்டைன்னு கெளம்பி வந்திருவானுங்க. நாங்களும் அதுக்குத் தோதா ஏற்பாடு பண்ணி வெச்சிக்கிட்டுத்தான் ஊருக்குள்ளயே கால வெப்போம். எங்க உசுர காப்பாத்திக்கணுமே சாமீ, அதனாலதான்... சுகர் பேக்டரிக்காரனுக்கும், எங்க பங்காளி மவனுங்களுக்கும் உள்ளூர் போலீஸு சப்போர்ட் பண்ணுவாங்களோன்னு பயமாருக்குது... யார் எது செஞ்சாலும், முப்பாட்டன் சொத்தை நாங்க விட்டுட்டு வரப் போறதில்லே. முடிஞ்ச வரைக்கும் ஊர்ப்பெரிய மனுஷங்கள வெச்சிப் பேசிப் பார்க்கலாம். அதுக்கு அவனுங்க தோதுபட்டு வரமாட்டானுங்க. தகராறு, வெட்டுக்குத்து அது இதுன்னு விபரீதம் ஆகிடுமோன்னும் அச்சமாத்தான் இருக்கு சாமீ. ஒருவேளை அப்படி ஏதாவது ஆகிப்போச்சுன்னா போலீஸ்ல கண்டிப்பா எங்கமேல கேஸைப் போடுவாங்க. அப்படிக் கேஸூ, அது இதுன்னு ஆகிப்போச்சுன்னா உடனுக்குடனே எங்க தரப்பைக் கைது பண்ணாம மூணு மாசமோ, ஆறுமாசமோ அவகாசம் கொடுத்து அரெஸ்ட் பண்ணாம விட்டு வெக்கணுஞ்சாமீ. நாங்க அதுக்குள்ள சுகர் பேக்ட்டரிக்காரன் கிட்டயிருந்து எப்படியாவது நிலத்தை மீட்ருவோம். சினிமா நடிகரு எஸ்.வி.சேகர் விஷயத்துல அவரைக் கைது பண்ணாம, மெட்றாஸ் போலீஸ், எப்படிக் கண்டுக்காம இருக்குதோ, அதேமாதிரி எங்களையும் கண்டுக்காம ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ இருந்தாப் போதுஞ்சாமீ. எந்தத் தயக்கமும் வேணாஞ்சாமீ... மொத தடவ இப்படி பண்ணாத்தான் நீங்க யோசிக்கணும்... ஏற்கெனவே எஸ்.வி.சேகர் விஷயத்துல அப்படி நடந்துக்கிட்டுத்தானே இருக்கு சாமீ... இதக் கொஞ்சம் கவனிங்க சாமீ!''