நீதிமன்றத்துக்குள் வராதீங்க'- போலீஸை வெளியேற்றி கேட்டை இழுத்து மூடிய வக்கீல்கள்

திருத்தணியை சேர்ந்த வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு செய்ததோடு, காவல்துறையினரை வெளியேற்றி நீதிமன்றத்தின் கேட்டை இழுத்து மூடினர்.

திருத்தணியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், இன்று  நீதிமன்றப் புறக்கணிப்பு செய்ததோடு, காவல்துறையினரை வெளியேற்றி நீதிமன்றத்தின் கேட்டை இழுத்து மூடினர்.

நீதிமன்றம்

திருத்தணி தணிகாசலம் கோயில் தெருவின் அருகில், கோயிலுக்குச் சொந்தமான காலி இடத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ரகுநாதன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக வழக்கறிஞர் தீனதயாளனும் அந்தப் பகுதி பொதுமக்களும் ரகுநாதனிடம் கேட்டுள்ளனர். அப்போது, அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பு நடந்துள்ளது. இதையடுத்து ரகுநாதன், திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் விநாயகத்திடம் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கறிஞர் தீனதயாளனை போலீஸார் கைதுசெய்து, திருத்தணி நீதிமன்ற நீதிபதி சுதாராணி வீட்டில், நள்ளிரவில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனிடையே, ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்பட்டுவரும் காவல் நிலைய ஆய்வாளர் விநாயகம் மற்றும் நீதிபதி சுதாராணி ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் இரண்டு நாள்களாக நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று நடந்த போராட்டத்தின்போது, நீதிமன்றத்துக்கு வந்த காவல்துறையினரைத் திருப்பி அனுப்பியதோடு, கேட்டை இழுத்து மூடினர். இதையடுத்து, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது, வழக்கறிஞர் தீனதயாள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும். அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ரகுநாதனைக் கைதுசெய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். இந்த மறியல் போராட்டத்தால், திருத்தணி - சென்னை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!