`ஸ்டெர்லைட் மூடல் விவகாரத்தில் கொள்கை முடிவு எடுங்கள்’ - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்று வைகோ தாக்கல் செய்த வழக்கில், தமிழக அரசுக்கு  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுரை கூறியுள்ளது.

வைகோ

 கடந்த ஏப்ரல் 24-ம் தேதி வைகோ தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை இன்று நடந்தது. வைகோ தரப்பு ஆஜரான வழக்கறிஞர் அஜ்மல்கான், “கடந்த மே 28-ம் தேதி  தமிழக அரசு பிறப்பித்த ஆணையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காற்று மாசுபடுதல், தண்ணீர் மாசுபடுதல் குறித்த சட்டப் பிரிவுகளின் அடிப்படையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு முன்பு கொடுக்கப்பட்ட அனுமதி காலாவதியாகிவிட்டது என்றும் மீண்டும் புதிய அனுமதி கொடுக்க முடியாது என்பதால், அரசமைப்புச் சட்டத்தின் 48வது பிரிவின் அடிப்படையில் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. இதை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத்தில் முறையீடு செய்து அனுமதி பெற்றால், தமிழக அரசு ஆணை செல்லுபடி ஆகாது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான காரணங்களை விளக்கமாகப் பட்டியலிட்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான அரசியல் சட்டத்தின் 48 வது பிரிவின் கீழ் மூடப்படுவதாக, கொள்கை முடிவு எடுத்து தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அப்போதுதான் ஆலை நிரந்தரமாக மூடும் நிலை உருவாகும்” என்று கூறினார்.

இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசு வழக்கறிஞரிடம், "காற்றுச் சட்டம், தண்ணீர்ச் சட்டப் பிரிவுகளின் கீழ் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுக்காததை மட்டுமே குறிப்பிட்டு,  அரசியல் சட்டத்தின் 48வது பிரிவைக் காரணம் காட்டி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாகத் தமிழக அரசு வழங்கிய அரசு ஆணை தெளிவாக இல்லாததால், ஒரு கொள்கை முடிவு எடுத்து, அரசாணை பிறப்பிப்பதற்கு இந்த நீதிமன்றம் யோசனை கூறுகிறது. இந்த யோசனையைத் தமிழக அரசுக்கு அரசு வழக்கறிஞர் தெரிவித்து செயல்படுத்தலாம்" என்று கூறி வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்த வழக்கில் மனுதாரர் என்ற முறையில் வைகோ,  உயர் நீதிமன்றக் கிளைக்கு வந்திருந்தவர், 'ஸ்டெர்லைட் ஆலையை மூடிய விவகாரத்தில் தமிழக அரசு நாடகமாடுவதாக' செய்தியாளர்களிடம் கூறினார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!