வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (13/06/2018)

கடைசி தொடர்பு:22:40 (13/06/2018)

தொடர் மழையால் நிரம்பும் அணைகள்: 3 நாள்களில் 45 அடி அதிகரித்த சேர்வலாறு அணை!

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் கனமழையின் காரணமாக, அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. சேர்வலாறு அணை 3 நாட்களில் 45 அடி அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் கனமழையின் காரணமாக, அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. சேர்வலாறு அணை 3 நாள்களில் 45 அடி அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

நிரம்பி வழியும் அணைகள்

தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்திருப்பதால், மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. அணைப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் அணைகள் வேகமாக நிரம்பிவருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 3 நாள்களாக தொடர் மழை பெய்துவருவதால், அணைகளின்  நீர் மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. கொடுமுடியாறு அணை நிரம்பி வழிகிறது. குண்டாறு அணை நிரம்பும் நிலையில் இருக்கிறது.

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையில், கடந்த 10-ம் தேதி 50 அடி தண்ணீர் இருந்தது. ஆனால், தொடர்ந்து பெய்துவரும் மழையால், அந்த அணை 3 நாளில் 16 அடி அதிகரித்து, 66 அடியை எட்டியது. மணிமுத்தாறு அணை 12 அடி அதிகரித்து, 94 அடியாக உள்ளது. கடந்த 10-ம் தேதியில் 65 அடியாக இருந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம், 3 நாள்களில் 45 அடி அதிகரித்து 110 அடியை எட்டியிருக்கிறது.

குற்றாலம் அருவி

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பது, விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இதனிடையே, தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் பலத்த சத்தத்துடன் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. அதனால், மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட மலைப் பகுதியிலும் பலத்த காற்றுடன் மழைபெய்துவருகிறது. வேகமாக காற்று வீசியதால், மின்சாரம் தடைபட்டது. மின்கம்பங்கள் சரிந்துவிழுந்ததால் மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதிகளான நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி, குதிரைவெட்டி ஆகிய கிராமங்களில்  மின்சாரம் தடைபட்டது. அதைச் சரிசெய்யும் பணிகளை மின்வாரிய ஊழியர்கள் மேற்கொண்டுவருகிறார்கள்.