வெளியிடப்பட்ட நேரம்: 19:04 (13/06/2018)

கடைசி தொடர்பு:19:04 (13/06/2018)

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் நாளை தீர்ப்பு..!

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரின் தகுதிநீக்கம்குறித்த வழக்கில், நாளை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றம்


தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், அப்போதைய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். அதனால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அ.தி.மு.க கொறடா, சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரைசெய்தார்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்

அதில், கடிதம் அளித்தது தொடர்பாக எம்.எல்.ஏ., ஜக்கையன் மட்டும் தனபாலிடம் அளித்திருந்தார். அதையடுத்து, அவரைத் தவிர டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர், கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி  தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வின் முன்பு நடைபெற்றுவந்தது.

இந்த வழக்கில், நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நாளை காலை, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் முதல் வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.