வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (14/06/2018)

கடைசி தொடர்பு:01:00 (14/06/2018)

ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதி..!

அண்ணா கிராம ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்காக நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் நான் கலந்து கொண்டேன். என் கணவர் தலையில் அடிப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னுடன் நேர் முக தேர்வு எழுதிய பலருக்கு வேலை கிடைத்துவிட்டது. ஆனால் எனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தனிசபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர், பாஸ்கர்( 40). இவரது மனைவி ரேவதி (32). கணவனும்  மனைவியும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று வந்தனர். அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீஸார், சம்பவ இடத்துக்கு  வந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட ரேவதி மற்றும்
பாஸ்கரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ரேவதி, போலீஸாரிடம்  ஒரு மனுவைக் கொடுத்தார். அதில் அவர், 'நாங்கள் தனிசபாக்கத்தில் வசித்துவருகிறோம். இந்தப் பகுதி அண்ணா கிராமம் ஒன்றியத்துக்கு உட்பட்டதாகும். கடந்த பிப்ரவரி மாதம் அண்ணா கிராம ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்காக நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

இதில் நான் கலந்துகொண்டேன். என் கணவருக்கு தலையில் அடிப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்ட பலருக்கு வேலை கிடைத்துவிட்டது. ஆனால், எனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இந்தப் பகுதியில் உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியை எனக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, போலீஸார் ரேவதியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் அழைத்துச்சென்றனர். பின்னர் ரேவதி, அங்கிருந்த அதிகாரியிடம் தனது கோரிக்கை மனுவைக் கொடுத்தார். பின்னர் இருவரும் வீட்டுக்குச் சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.