திருநாவுக்கரசர் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய காங்கிரஸார்..!

காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாகவுக்கராசர் கலந்து கொள்ளும் கட்சி நிகழ்ச்சிக்கு எதிராக குள்ள நரியும் கொரடாசேரியானும்,கொத்தடிமைகளும் என புத்தக வெளியீடு விழாவிற்கு அடிப்பது போல் திருநாவுக்கரசரையும், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரனையும் விமர்சித்து சக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே போஸ்டர் ஒட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கலந்துகொள்ளும் கட்சி நிகழ்ச்சிக்கு எதிராக, குள்ள நரியும் கொரடாசேரியானும், கொத்தடிமைகளும் என புத்தக வெளியீட்டு விழாவுக்கு அடிப்பது போல, திருநாவுக்கரசரையும், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ராஜேந்திரனையும் விமர்சித்து, சக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே போஸ்டர் ஒட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சியில்  நிலவிவரும் கோஷ்டி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக இருந்தவர்களின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும் தனித் தனி கோஷ்டியாகச் செயல்படுகின்றனர். இதனால், கட்சி வளர்ச்சியடையாமல் தத்தளிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதை நீரூபிக்கும் விதமாக மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தஞ்சாவூரில் மாநகர மாவட்ட வாக்குச்சாவடி கங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள்  கூட்டம் நடந்தது. இதில் சிறப்புரையாற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டார். மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் இந்தக் கூட்டம் நடந்தது. இதற்காக திருநாவுக்கரசர் வருகையொட்டி நகரம் முழுவதும் கட்சியினர் வரவேற்பு ஃபிளெக்ஸ் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள்  ஒட்டியிருந்தனர்.

இந்த நிலையில், நகரம் முழுவதும் காங்கிரஸ் கட்சியில் உள்ள எதிர்கோஷ்டியினர், 'குள்ள நரியும் கொரடாச்சேரியானும் கொத்தடிமைகளும்' என்கிற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. இந்த விழா, திருநாவுக்கரசர் தலைமையில் நடக்கிறது என அந்த போஸ்டரில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் இடத்தையும், அந்த நேரத்தையும் குறிப்பிட்டு அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தன. மேலும், அழைப்பின் மகிழ்வில் என்கிற இடத்தில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் என்பதற்குப் பதிலாக, பல கட்சி ராஜேந்திரன் பாசறை எனவும், கட்சி அலுவலக விலாசத்தில், தலைமை அலுவலகம் 420 செட்டிமடம்; கிளை அலுவலகம் கண்ணன் நகர் தஞ்சாவூர் எனவும் இடம்பெற்றிருந்தன. 

இந்த போஸ்டரைப் பார்த்த அனைவரும், புத்தக வெளியிட்டு விழாவிற்காக  ஒட்டப்பட்டது என நினைத்தே பார்த்துச் சென்றனர். சிறிது நேரம் கழித்துதான் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களே இப்படி திருநாவுக்கரசர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியுள்ளார்கள் எனத் தெரியவந்தது. இதைப் பார்த்த மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள், நகைச்சுவையாகச் சிரித்தனர். பாரம்பர்யமான காங்கிரஸில் இருந்துகொண்டு இதுபோல நடந்துகொள்கிறார்களே என கட்சியின் உண்மைத் தொண்டர்கள் சிலர்  வேதனைப்பட்டுக் கொண்டனர். 

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம். 'தஞ்சை மாநகர மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் மீது நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதுகுறித்து கட்சியின் தலைமைக்கும், தலைவரான திருநாவுக்கரசருக்கும் பலமுறை புகார் அளித்தும் அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பல நிர்வாகிகள் காங்கிரஸ் நடத்தும் போராட்டம், கூட்டங்களில் பங்கு பெறாமல் இருந்துவருகிறார்கள். இதைத் தலைமையும், திருநாவுக்கரசரும் சரிசெய்யவில்லை. கொரடாச்சேரி,  ராஜேந்திரனின் சொந்த ஊர் என்பதாலும், அவருக்கு வேண்டிய நபர்களை வைத்துக்கொண்டு கட்சியை நடத்திவருகிறார் என்பதாலும்' குள்ளநரியும் கொரடாச்சேரியானும், கொத்தடிமைகளும்' என ராஜேந்திரன் மீது உள்ள அதிருப்தியைத் தெரிவிக்கவும், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திருநாவுக்கரசர் கலந்துகொள்ள இருந்த இந்த நிகழ்ச்சிக்கு இது போன்ற போஸ்டரை ஒட்டியிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தலைமை கவனித்து நடவடிக்கை எடுத்தால்தான் தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சி தப்பிக்கும்' என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!