புதிய வாடகை கட்டமாட்டோம்..! ஊட்டி நகராட்சி கடை உரிமையாளர்கள் போராட்டம் | Municipality shop owner refuse to pay new rent

வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (14/06/2018)

கடைசி தொடர்பு:01:30 (14/06/2018)

புதிய வாடகை கட்டமாட்டோம்..! ஊட்டி நகராட்சி கடை உரிமையாளர்கள் போராட்டம்

உதகமண்டலம் நகராட்சி அனைத்து வியாபாரிகள் முன்னேற்றச் சங்க நிர்வாகிகள் செய்த குளருபடிதான் புதிய வாடகை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாகக் குமுறும், சீல் வைக்கப்பட்ட நகராட்சி கடை உரிமையாளர்கள்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி வணிக வளாகத்தில் 1619 கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஏலம் விடப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைந்த கடைகளுக்குக் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல், சந்தை மதிப்பின் அடிப்படையில் மறுமதிப்பீடு செய்யப்பட்டு, ஊட்டி நகராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட புதிய வாடகையைச் செலுத்த வேண்டும் என நகராட்சி வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், இந்த வாடகை உயர்வை கடை உரிமையாளர்கள் ஏற்க மறுத்து, அவர்கள் கட்டி வந்த பழைய வாடகை பணத்தை டி.டி (டிமாண்ட் டிராப்ட்) மூலம் நகராட்சிக்குச் செலுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று, முதற்கட்டமாக 53 கடை உரிமையாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட புதிய வாடகைத் தொகையைச் செலுத்துமாறு நகராட்சி சார்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அதில் 3 நாள்களுள் கட்ட தவறினால், கடையின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், கடை ஏலம் விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 3 நாள்கள் நிறைவடைந்தும் புதிய வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி ஆணையர் ரவி, 11-ம் தேதி அதிகாலை போலீஸார் துணையுடன் சீல் வைத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி வளாகத்தில் உள்ள அனைத்துக் கடை உரிமையாளர்களும் கடைகளை அடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நகராட்சி ஆணையர் ரவி, உதகமண்டலம் நகராட்சி அனைத்து வியாபாரிகள் முன்னேறச் சங்க நிர்வாகிகளிடம் நடத்திய பேச்சு வார்த்தையில், சீல் வைக்கப்பட்ட கடை உரிமையாளர்கள், புதிய வாடகையை ஓரிரு நாளில் செலுத்த ஒப்புக்கொண்டதால், கடைகளுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.


 

இது குறித்து சீல் வைக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் கூறுகையில், ``கடந்த 2016-ஆண்டு ஊட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் முதன் முதலாக வாடகை உயர்த்தப்பட்டது. அது அனைத்துக் கடை உரிமையாளர்களுக்கும் ஏற்றதாகத்தான் இருந்தது. இந்நிலையில், புதிய வாடகை நிர்ணயிக்கப்பட்ட 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் சில சங்க நிர்வாகிகள், உயர்த்தப்பட்ட புதிய வாடகையைச் செலுத்த வேண்டாம். பழைய வாடகையை டி.டி (டிமாண்ட் டிராப்ட்) மூலம் செலுத்த அறிவுறுத்தினர். மேலும், பழைய வாடகையைச் செலுத்த சங்கம் மூலம் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறினர். இதனால்தான் புதிய வாடகையைச் செலுத்தாமல் இருந்தாேம்.

குறிப்பாக ஊட்டி நகராட்சி வணிக வளாகத்தில் உள் வாடகைக்கு 4 முதல் 16 என அதிகக் கடைகளை வைத்துள்ள சங்க நிர்வாகிகள்தான் வாடகை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையின் படி சீல் வைக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் புதிய வாடகையைத்தான் செலுத்தியுள்ளோம்' என்று குமுறலுடன் சொல்கின்றனர். 

மேலும், நகராட்சி வணிக வளாகத்தில் உள்ள 70 சதவிகித கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டவை. அதாவது பரம்பரை பரம்பரையாகச் செயல்படும் கடைகள். அவர்கள் மாதம் சுமார் ரூ.500 முதல் 1,000 வைரதான் பழைய வாடகை செலுத்தி வந்தனர். உயர்த்தப்பட்ட புதிய வாடகை ரூ.7,700 வரை உள்ளதால் அதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. கடை வாடகை, கடையின் சதுர அடியைப் பொறுத்து மாறும். ஏலம் விடப்பட்ட கடை உரிமையாளர்கள் செலுத்திவந்த பழைய வாடகை சுமார் ரூ.4000. தற்பாேது ரூ.8000 ஆக உயர்ந்துள்ளது. ஊட்டி நகராட்சி வணிக வளாகத்தில் ஒரு கடை மட்டும் நடத்தி வரும் கடை உரிமையாளர்கள் வாடகை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், உள்வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகளுக்கு மொத்தமாக வாடகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதும், புதிய வாடகை செலுத்துவதில் சங்க நிர்வாகிகளின் குளறுபடி செய்ததுதான் காரணம் என்கின்றனர்.   

இது குறித்து ஊட்டி நகராட்சி ஆணையர் ரவி கூறுகையில், `ஊட்டி நகராட்சி வணிக வளாகத்தில் மொத்தம் 1,619 கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஏலம் விடப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைந்த 1,589 கடைகளுக்கு மட்டும்தான் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான அரசு ஆணைபடி சந்தை மதிப்பின் அடிப்படையில் தனியார் கடைகளை ஆய்வு செய்து, நகராட்சி கடை உரிமையாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்காதபடி மறுமதிப்பீடு செய்யப்பட்ட புதிய வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. இது தொடர்பான நோட்டீஸ் கூட கடை உரிமையாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு, 2017ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் புதிய வாடகை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. சில காரணங்களால் கடை உரிமையாளர்கள் புதிய வாடகை செலுத்தாமல் டி.டி.(டிமாண்ட் டிராப்ட்) மூலம் பழைய வாடகையைச் செலுத்தி வந்தனர். புதிய வாடகை முறைப்படி, நகராட்சி வணிக வளாக, கடை உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும்’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க