ஸ்டெர்லைட் ஆலை என்ன தேசியச் சொத்தா? வைகோ ஆவேசம்

ஸ்டெர்லைட் ஆலை என்ன தேசியச் சொத்தா? இதனைப் பாதுகாக்க ஏன் அரசு, இவ்வளவு அக்கறைக் கொண்டு மக்களின் உயிரை எடுக்கும் நோக்கில் செயல்பட்டது? அமைச்சரவையைக் கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து அரசு, சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோவின் கார் ஓட்டுநர் துரையின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ``தமிழக அரசை இயக்குவதே ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக இயக்குநர் அனில் அகர்வால்தான். இந்த ஆலைக்கு எதிராக இனி யாரும் போராட முன் வரக் கூடாது. போராட வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படக் கூடாது என்ற நினைப்பில் அனில் அகர்வாலின் பேச்சைக் கேட்டு அப்பாவி மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது எடப்பாடி அரசு.

வைகோ

ஸ்டெர்லைட் ஆலை சுற்றுப்பகுதிக்கு 144 தடை உத்தரவைப் போட்டுவிட்டுதான் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளது. தூத்துக்குடி மெள்ள மெள்ள இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், வீடுகளுக்குள் புகுந்து இன்னமும் ஏன் காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்? மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் இன்னும் பல அமைப்பைச் சேர்ந்தவர்களையும் கைது செய்து வருவது ஏன்? 

இச்சம்பவத்தில் மக்களின் கொந்தளிப்பு நிலையைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் முழுமையற்ற ஓர் அரசாணையை அவசரகதியில் வெளியிட்டு, ஆலைக்குச் சீல் வைப்பும் நடந்துள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயல். முற்றிலுமான கண்துடைப்பு நாடகம். 

எந்தவித விளக்கமும் இல்லாமல், குழப்பமான இரண்டு, மூன்று காரணங்களை மட்டும் குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணையை, ஆலைத் தரப்பினர் நீதிமன்றத்தின் மூலம் எளிதில் உடைத்து விட்டு மீண்டும் ஆலையைத் திறக்க வாய்ப்பு உண்டு. இந்த வாய்ப்பினை ஆலைக்குச் சாதகமாக உருவாக்கியுள்ளது எடப்பாடி அரசு.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் காப்பர் கிடைக்கவில்லை. அதனால், மின்மாற்றிகளை சரிசெய்ய முடியவில்லை என மின்துறை அமைச்சர் கூறுகிறார். இதன் மூலம் ஆலை திறக்கப்பட வேண்டும் என மறைபொருளுடன் கூறியுள்ளதை அறிய முடிகிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், ஆலைத்தரப்பு நீதிமன்றம் மூலம் ஆலையைத் திறந்துவிட்டது என முதல்வர் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.

நீதிமன்றம் மூலம் ஆணை பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஆலைத்தரப்பு முயன்றாலும், ஆலையை நிச்சயம் திறக்க விடமாட்டோம். அப்போதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும். ரத்தினகிரியில் விவசாயிகள் சம்மட்டியுடன் ஆலையை அடித்து நொறுக்கி தரைமட்டமாக்கியது போல இந்த ஆலையும் தரைமட்டமாக்கப்படும்.

ஸ்டெர்லைட் ஆலை என்ன தேசியச் சொத்தா? இதனைப் பாதுகாக்க ஏன் அரசு, இவ்வளவு அக்கறை கொண்டு மக்களின் உயிரை எடுக்கும் நோக்கில் செயல்பட்டது? தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும். இதைச் செய்யத் தவறினால் மக்கள் போராட்டம் தொடரத்தான் செய்யும்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!