வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (14/06/2018)

கடைசி தொடர்பு:08:02 (14/06/2018)

நெல்லையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காதில் பூச்சுற்றி நூதன ஆர்ப்பாட்டம்!

சென்னையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காதில் பூச்சுற்றி நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

சென்னையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காதில் பூச்சுற்றி நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்கள், அமைச்சகப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளின் தொழில்நுட்பப் பணியாளர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு இடையே இருக்கும் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். பள்ளி மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கான 7-வது ஊதியக்குழுப் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.

சிறப்புக் காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், பகுதி நேரச் சிறப்பு ஆசிரியர்கள், ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் எழிலகத்தில் இந்த அமைப்பின் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாள்களாக இந்தப் போராட்டம் நடந்த நிலையிலும் அரசு சார்பாகப் பேச்சுவார்த்தைக்கு யாரும் முன்வரவில்லை. அதனால் இன்று கோட்டையை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர். சென்னையில் கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை உடனே விடுவிக்க வலியுறுத்தியும் கோரிக்கைகளை வலியுறுத்தியும் நெல்லையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பாக கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது.

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பால்ராஜ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், காதுகளில் பூக்களைச் சுற்றியபடி போராட்டத்தில் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள். பின்னர் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் பொறுப்பாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்கள். அதைத் தொடர்ந்து பேசிய நிர்வாகிகள், ``எங்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்க மறுத்தால், தமிழகம் தழுவிய அளவில் போராட்டத்தை தீவிரப்படுத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியே இல்லை’’ எனத் தெரிவித்தனர்.