துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து கண்டனப் பேரணி - சி.பி.எம் கட்சி அறிவிப்பு

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து வரும் 18-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டனப் பேரணியும், பொதுக் கூட்டமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

தூத்துக்குடியில் கடந்த மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி மக்களின் பேரணியின்போது ஏற்பட்ட கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தைக் கண்டித்தும், தொடர்ந்து நடைபெற்று வரும் கைது நடவடிக்கையைக் கண்டித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் அறிக்கைகள் வெளியிட்டன.

துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்று 20 நாள்களுக்கு மேல் ஆகியும் தூத்துக்குடியில் போலீஸார் எண்ணிக்கையும் குறைக்கப்படவில்லை. இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் 18-ம் தேதி கண்டனப் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்த உள்ளது.

இதுகுறித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அர்ஜூனன் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தூத்துக்குடியில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதையும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதையும் கண்டித்து வரும் 18-ம் தேதி மாலையில் கண்டனப் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்திட திட்டமிட்டுள்ளோம். 

மே 23-ம் தேதி இரண்டாவது நாளாக துப்பாக்கிச் சூடு நடந்த அண்ணாநகர் பக்கிள் ஓடைப் பகுதியில் இருந்து அண்ணாநகர் மெயின் ரோடு மற்றும் வி.வி.டி.,சிக்னல் வரை கண்டனப் பேரணி நடைபெற உள்ளது.

வி.வி.டி சிக்னல் அருகில் உள்ள சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள திடலில் கண்டனப் பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது.  இப்பொதுக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத், மத்தியக் குழு உறுப்பினர்கள் வாசுகி மற்றும் சம்பத்  ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இதுகுறித்து நடந்த மாவட்டக்குழு கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். இச் சம்பவத்துக்கு காரணமான முந்தைய ஆட்சியர், எஸ்.பி மற்றும் உயர் அதிகாரிகள், காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வதுடன் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!