`7 ஆண்டுகளாகக் குறுவை சாகுபடி இல்லை' - கண்ணீர் அஞ்சலி செலுத்திய விவசாயிகள்!

Kuruvai cultivation

டெல்டா விவசாயிகளுக்கு இப்படியோர் வேதனை நேர்ந்திருக்கத் தேவையில்லை. கடந்த 7 ஆண்டு காலமாக காவிரி நீர் வராததால் குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகள் அதற்காக நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், நேற்று மெழுகுவத்தி ஏந்தி, ஒப்பாரி வைத்து தங்களது சோகங்களை வெளிப்படுத்திய காட்சி இதயத்தைக் கனக்க வைத்தது.  

விவசாயிகள்

`மாடு கட்டிப் போரடித்தால் மாளாது' என்று யானை கட்டிப் போரடித்த தமிழக டெல்டா விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடி செய்து சிறப்பாக வாழ்ந்து வந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகப் பருவமழை சரிவரப் பெய்யாத காரணத்தாலும், மேட்டூர் அணையிலிருந்து போதிய காவிரி நீர் திறந்துவிடப்படாததாலும் ஒருபோக சாகுபடி மட்டுமே மேற்கொள்கிறார்கள். கடந்த 6 ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர்த் திறந்துவிடுவது இல்லை. இதனால், குறிப்பாக நாகை மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளாகக் குறுவை சாகுபடி செய்வதில்லை.  

மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடவில்லை.  இதனால், வழக்கம்போல் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகிவிட்டது.  இந்நிலையில், காவிரி நீர் கிடைக்காததால் நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மீனம்பநல்லூர் ஊராட்சியில் விவசாயிகள் கிராமத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் கோட்டூரான் பாசன வாய்க்காலில் மெழுகுவத்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து அங்குள்ள பெண்கள் கும்மியடித்தும், ஒப்பாரி வைத்தும் தங்களது எதிர்ப்பை அரசுக்குத் தெரிவித்தனர். அப்போது, தென்மேற்குப் பருவமழை காரணமாகக் கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்குரிய காவிரி நீரைப் பெற்றுத்தரவும், மேலாண்மை ஆணையத்தை உடனடியாக அமைக்கவும் மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!