`நீ எப்படி அதிகாரிகளைச் சந்திக்கலாம்' - அதிக பணிச்சுமையால் தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ்!

கடலூர் ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் பெண் போலீஸ் ஒருவர் அதிக பணிச்சுமை காரணமாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பெண் போலீஸ் சவிதா

கடலூர் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருபவர் சவிதா (27). இவரின் கணவரும் போலீஸ்தான், அவரும் இதேபிரிவில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.  இந்நிலையில், சவிதா இன்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது கடிதம் எழுதிவைத்துவிட்டு விஷம் குடித்து மயங்கிக் கிடந்துள்ளார். அருகில் உள்ளவர்கள் அவரைக் காப்பாற்றி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், ``நான்  ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வருகிறேன். எனது கணவரும் இதே பிரிவில் பணியாற்றி வருகிறார். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. அதில் ஒரு பெண் குழந்தை உடல் நிலை சரியில்லாமல் உள்ளது. கணவன், மனைவி இருவரும் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருவதால் குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை. எனது உடல் நிலையும் சரியில்லை. இதுகுறித்து ஆயுதப்படை ஆய்வாளர் சிவசங்கரனிடம் கூறினால், அவர் மேலும் அதிக பணி தருகிறார். இதுகுறித்து உயர் அதிகாரியைச் சந்தித்து முறையிட்டால் நீ எப்படி அதிகாரிகளைச் சந்திக்கலாம் என சாதி ரீதியாகவும், மனரீதியாகவும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார்கள்" இவ்வாறு எழுதியுள்ளார். பெண் போலீஸ் பணிச் சுமையால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!