இறால் பண்ணைகளை மூடக் கோரி காதில் பூச்சுற்றி, சங்கு ஊதிப் போராட்டம்!

ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் இறால் பண்ணைகளை அகற்றுவது தொடர்பாக, கோட்டாட்சியர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, கிராம மக்கள் சங்கு ஊதி காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.

போராட்டம்

ராமேஸ்வரம் பகுதியில் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் இறால் பண்ணைகளை அகற்ற வலியுறுத்தி, சம்பை, மாங்காடு, வடகாடு, சுடுகாட்டன்பட்டி, ஓலைக்குடா, அரியான்குண்டு, குடியிருப்பு, ஏரகாடு உள்ளிட்ட கிராம மக்களும், மீனவர்களும் பல்வேறு போராட்டங்கள் நடத்திவருகின்றனர். இதுதொடர்பாகக் கடந்த மாதம் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, ஒரு மாத காலத்துக்குள் தீவில் உள்ள இறால் பண்ணைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக வருவாய் கோட்டாட்சியர் உறுதியளித்திருந்தார். இந்நிலையில், கோட்டாட்சியர் உறுதி அளித்தபடி இறால் பண்ணைகள் அகற்றப்படாததால், இன்று கிராம மக்கள் மற்றும் மீனவர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். 

ராமேஸ்வரம் மேலத்தெரு பகுதியிலிருந்து பேருந்து நிலையத்துக்கு ஊர்வலமாகச் சென்ற அவர்கள், தங்கள் காதுகளில் பூவை சுற்றிக்கொண்டு, சங்கு ஊதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், கோட்டாட்சியர் வந்து பேசினால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என அவர்கள் கூறினர். மாலை 5 மணி வரை கோட்டாட்சியர் வராத காரணத்தால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்  திரண்டு சங்கு ஊதியபடி காத்திருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!