`எனக்கு பிரதமராக வேண்டும் என ஆசை இல்லை' - சொல்கிறார் அகிலேஷ் யாதவ்!

பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

அகிலேஷ் யாதவ்

கடந்த வருடம் நடத்த உத்தரப்பிரதேசத் தேர்தலில், சமாஜ்வாடி கட்சி காங்கிரஸுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. ஆனால், இக்கூட்டணி தோல்வியைச் சந்தித்தது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று, யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்றார். இதன்பின் கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள அகிலேஷ், பா.ஜ.க எதிர்ப்புப் போர்வையில் யாரும் எதிர்பாராத விதமாக சமாஜ்வாடியின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான மாயாவதியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இக்கூட்டணி சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டியது. இந்நிலையில், உ.பி முன்னாள் முதல்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை காலிசெய்ய வேண்டும் என அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவின் அடிப்படையில், அகிலேஷ் யாதவ் தனக்கு ஒதுக்கப்பட்ட அரசுப் பங்களாவை காலிசெய்தார். ஆனால், பங்களாவைக் காலிசெய்யும்போது, விலையுயர்ந்த பொருள்களை எடுத்துச்சென்றதுடன், சமையலறை உள்ளிட்ட இடங்களைச் சேதப்படுத்தியாக பா.ஜ.க அவர் மீது குற்றம்சாட்டியுள்ளது. 

இந்த விவகாரம், உத்தரப்பிரதேசத்தில் சூடு பிடித்துள்ள நிலையில், இதுகுறித்து விளக்கமளிக்க அகிலேஷ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,  ``சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் சந்தித்த தோல்விகளைப் பொறுக்க முடியாமல் பா.ஜ.க-வினர் இவ்வாறு பேசிவருகின்றனர். உடற்பயிற்சி சாதனங்கள், விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்டவை நான் வாங்கியவை. அதை நான் எடுத்துச் சென்றதில் என்ன தவறு"  என்றார். அப்போது, பிரதமர் பதவி பற்றி செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்தவர்,  ``எனக்குப் பிரதமர் ஆக வேண்டும் என்ற கனவோ, இலக்கோ இல்லை. பிரதமர் பதவிக்கான போட்டியிலும் நான் இல்லை. எனது மாநிலத்தில் மெட்ரோ அமைக்க வேண்டும் என்ற கனவு மட்டுமே இருக்கிறது" என்று கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!