வெளியிடப்பட்ட நேரம்: 09:08 (14/06/2018)

கடைசி தொடர்பு:09:27 (14/06/2018)

போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு - திருச்சியில் இருவர் கைது

போலியான ஆவணங்கள்மூலம் நில அபகரிப்பு செய்த இருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

திருச்சி தில்லைநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தென்னூரைச் சேர்ந்தவர், லட்சுமண அய்யர் மகன் விஸ்வநாதன். இவர்களின் குடும்பத்துக்கு திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் சொந்தமாக, சுமார் 66,000 சதுரஅடி இடம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 3 கோடிக்கும் மேல் இருக்கும். விஸ்வநாதனின் மூதாதையர்கள் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகத்தினரிடமிருந்து வாங்கியது இந்த நிலம். விஸ்வநாதன் வேலை விசயமாக அவரது குடும்பத்துடம் சில வருடங்களாக வெளியூரில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் வட்டம் வெள்ளித்திருமுத்தம் கிராம உதவியாளராகப் பணிபுரிந்துவரும் சிந்தாமணி மற்றும் காந்தி நகரைச் சேர்ந்த பிச்சமுத்து ஆகியோர், விஸ்வநாதனின் இடத்தை கிராமப் பதிவேடுகளில் போலியான பதிவுகளை ஏற்படுத்தி, பிச்சமுத்துவின் மகன்களான மோகன்ராஜ் மற்றும் உதயமூர்த்தி ஆகியோருக்கு செட்டில்மென்ட் செய்துள்ளார். 

நிலத்தை ஆக்கிரமிக்கும் எண்ணத்துடன் எங்களை நிலத்தின் அருகில் போகமுடியாதபடி செய்துவருகின்றார் என திருச்சி மாநகர குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் நடந்த விசாரணையில், பிச்சமுத்து வைத்திருந்த இடத்தின் ஆவணங்கள் அனைத்தும் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. போலி ஆவணங்கள்மூலம் பதிவுகளை ஏற்படுத்தி, நிலத்தை அபகரிக்க முயன்ற கிராம உதவியாளர் பிச்சமுத்து மற்றும் அவரது இரு மகன்கள் உள்பட, மேலும் மூன்று பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைதுசெய்தனர். இதில், பச்சமுத்துவின் இரண்டாவது மகன் உதயமூர்த்தி தலைமறைவாக உள்ளதால், அவரை போலீஸார்  தேடி வருகின்றனர். போலி ஆவணங்கள்மூலம் கோடிக்கணக்கான ரூபாய்  மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டது திருச்சியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.  

    

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க