வெளியிடப்பட்ட நேரம்: 10:39 (14/06/2018)

கடைசி தொடர்பு:10:39 (14/06/2018)

ஒயின்ஷாப் பார் வேலைக்கு பெண்கள்? சிக்கிய இருவரிடம் தீவிர விசாரணை

கோவில்பட்டியில், 'ஒயின்ஷாப் வேலைக்குப் பெண்கள் தேவை' என்று விளம்பரப்படுத்திய  விவகாரம் தொடர்பாக 2 பேரிடம் போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டி பகுதியில், 'விரைவில்  குரங்கனி ஒயின் ஷாப் பார்' தமிழ்நாட்டில் பெண்களால் நடத்தப்படும் ஒயின் ஷாப் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், இது தனலட்சுமி ஃபைனான்ஸ் விமல்ராஜ் குருப்பால் நடத்தப்படுகிறது என்றும், 

கோவில்பட்டியில் பிரபலமாக உள்ள ஹோட்டல் தயாரிப்பான மதிய உணவு, கறி, மீன் வகைகள் உண்டு என்றும்,  வேலைக்கு பெண்கள் தேவை என்றும், வீட்டுப் பெண்கள், கல்லூரி பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் கம்ப்யூட்டர் நன்கு தெரிந்த பெண்கள் வேலைக்குத் தேவை என்றும், மாதச் சம்பளமாக ரூ 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை தரப்படும் என்றும் குறிப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரம், கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களில் மிக வேகமாகப் பரவியது. 

இந்த துண்டுப் பிரசுரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவில்பட்டியில் பிரபலமாக உள்ள ஹோட்டல் நிர்வாகத்தின் உரிமையாளர் ராஜசேகர், தங்களுடைய அனுமதி இல்லாமல் தங்கள் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தியுள்ளதாக, மேற்குக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதைத் தொடர்ந்து,  துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்த கோவில்பட்டி ராமலிங்கம் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்ற விமல்ராஜ் மற்றும்  துண்டுப்பிரசுரத்தை அச்சிட்டுக் கொடுத்த வசந்த நகரைச் சேர்ந்த பாலமுருகன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்திவருகின்றனர். 

இதில், செல்வராஜ் என்பவர் மனநிலை சரியில்லாதவர் என்பது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க