`தமிழகத் தலைவர்களுக்கு மரியாதை இல்லை!' - மோடியை விமர்சித்த தமிமுன் அன்சாரி

`தூத்துக்குடி போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியதன் காரணமாகத்தான் 'காலா' படம் தோல்வியடைந்துள்ளது' என்கிறார் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி

 மனிதநேய ஜனநாயக கட்சி

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, திருச்சி ஜங்சன் பகுதியில் உள்ள ரோசன் மஹாலில் நேற்று இரவு நடைபெற்றது. இதில், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும் எம்.பி-யுமான ப.குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

தமிமுன் அன்சாரி

நிகழ்ச்சி முடிந்த பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கூறுகையில், ``தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காக போராடும் தலைவர்களைப் பாதுகாக்கவேண்டியது காவல்துறை மற்றும் உளவுத் துறையின் கடமை. பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் கைதுசெய்யப்பட வேண்டிய எஸ்.வி.சேகர், தமிழக அரசுக்கும் காவல் துறைக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கிறார். 18 எம்.எல்.ஏ-க்கள் மீது, தீர்ப்பு வந்தபிறகுதான் கருத்துகளை முழுமையாகச்  சொல்லமுடியும். வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தும்போது, விவசாயிகள் கேட்கக்கூடிய இழப்பீடுகளைக் கொடுக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கை நிராகரிக்கப்படும்போது ஆதரவு அளிப்போம். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு, 8 வழிச் சாலை திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். நடிகைக்குக் கொடுக்கும் மரியாதையை பிரதமர் மோடி தமிழக அரசியல் தலைவர்களுக்கு கொடுப்பதில்லை. தமிழக மக்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் மோடி அவமதித்திருக்கிறார். காவிரி, ஸ்டெர்லைட், மீத்தேன் உள்ளிட்டவற்றுக்குப் போராடிய தமிழக மக்களைப் பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது வேதனை.

கூடங்குளம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள்மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.சினிமா நடிகர் அரசியல் தலைவர்களாக மாறுவதை பொதுமக்கள் தடுத்து நிறுத்த வேண்டும். மேக்கப் போடும் நடிகரெல்லாம் தமிழ்நாட்டில் அரியணை ஏறலாம் எனக் கனவு  காணக் கூடாது.  அதை, சமீபத்தில் வெளியான திரைப்படம் பெற்ற தோல்வியின்மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியதன் காரணமாகத்தான், காலா படம் தோல்வியடைந்திருக்கிறது. தமிழ் நாட்டில் தனியார் தொலைக்காட்சிகள் பெருகிய பிறகுதான், ஆரோக்கியமான அரசியல் விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டக்காரர்களுடன் முதலமைச்சர் பேசித் தீர்வு காண வேண்டும்” என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!