தபாலில் சென்ற பணி ஆணை; அரசியல்வாதிகளுக்கு `செக்’ வைத்த விழுப்புரம் கலெக்டர்

இலவச வீடு கட்டும் பணி ஆணை வழங்கும் விவகாரத்தில் அரசியல் தலையீடுகளைத் தவிர்க்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்.

ஆட்சியர்

2022-க்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்குடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது `பிரதான மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டம். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டில் கிராமப்புறங்களில் வீடுகள் இல்லாமல் வாழும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 19,069 வீடுகள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2,468 பயனாளிகளுக்கு வீடு கட்டிக்கொள்வதற்கான பணி ஆணையைப் பதிவு தபால் மூலம் அனுப்பி அரசியல் தலையீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன். மேலும் 5,158 பயனாளிகளுக்கு இந்தப் பணி ஆணை இதேபோல பதிவு தபால் மூலம் அனுப்பப்பட உள்ளது.

தலைமை தபால் அலுவலரிடம் பணி ஆணையை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இந்தத் திட்டத்தில் பயனாளிகள் 2011-ம் ஆண்டு சமூக பொருளாதார கணக்கெடுப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 269 சதுர அடியில் ஒரு கான்கிரீட் வீடு கட்டுவதற்கு பயனாளிகளுக்கு அரசு மானியத் தொகையாக ரூ.2,02,160. வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் தேர்வாகிய பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட மானிய விலையில் சிமென்ட் மூட்டைகள், இரும்புக் கம்பிகள், கதவு, ஜன்னல்கள் வழங்கப்படுகின்றன. இந்தக் கட்டுமான பொருள்களுக்கான கிரயத் தொகை பயனாளிகளுக்கு பட்டியல் தொகை வழங்கும்போது பிடித்தம் செய்யப்படுகிறது. கடந்த காலங்களில், இந்த வீடு கட்டும் திட்டத்துக்கான பணி உத்தரவு பி.டி.ஓ, துணை பி.டி.ஓ-க்கள், ஊராட்சி செயலாளர் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் அரசியல் தலையீடுகள் மற்றும் பல்வேறு பிரச்னைகள் இருந்ததால் தற்போது பதிவு தபால் மூலம் பயனாளிகளுக்கு நேரடியாக அனுப்பப்படுகிறது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!