வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (14/06/2018)

கடைசி தொடர்பு:13:40 (14/06/2018)

தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை; குண்டாறு அணை நிரம்பியது!

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நேற்று குளிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதலாகவே மேகமூட்டத்துடன் சாரல் மழையும் தென்றல் காற்றும் வீசி வருகிறது.

தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை நிரம்பி வழிகிறது

குண்டாறு அணை

நெல்லை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன் காரணமாகப் படுபாதாளத்தில் கிடந்த அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென வேகமாக உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையில் 67.50 அடி தண்ணீர் இருக்கிறது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு வறண்டு நீரின்றி காணப்பட்ட சேரவலாறு அணையில் தற்போது 113 அடி தண்ணீர் இருக்கிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 84 அடியாக இருக்கிறது. மாவட்டத்தின் பிற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தபடியே இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொடுமுடியாறு அணை கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிரம்பி வழிந்த நிலையில், நேற்று இரவு முழுவதும் குண்டாறு அணைப்பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்தது. 

அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் 8.2 செ.மீ மழை பெய்ததால் குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. அணைக்கு அருகில் உள்ள நெய்யருவி மற்றும் தனியார் அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் செல்கின்றனர். குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நேற்று குளிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதலாகவே மேகமூட்டத்துடன் சாரல் மழையும் தென்றல் காற்றும் வீசி வருகின்றன. ஆனாலும், மெயின் அருவியில் வெள்ளம் குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். 

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால், களக்காடு தலையணையில் வெள்ளம் அதிகமாக இருக்கிறது. அத்துடன், காட்டாற்று வெள்ளம் ஏற்படும் ஆபத்து இருப்பதால் தலையணை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் அதிகமாக இருப்பதால், மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு வனத்துறை விதித்த தடை 6 வது நாளாகத் தொடர்கிறது.