`காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா?’ - எஸ்.வி.சேகர் விவகாரத்தில் திருநாவுக்கரசர் கேள்வி

எஸ்.வி. சேகர் மீது தமிழகக் காவல் துறைதான் வழக்குப்பதிவு செய்தது. ஆனால், அவரை இதுவரை கைதுசெய்யவில்லை என்றால், காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளத அல்லது அவரை கைது செய்வதற்கு காவல் துறைப் பயப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. என திருநாவுக்கரசர் தெரிவித்தார்

எஸ்.வி. சேகர் மீது தமிழகக் காவல் துறைதான் வழக்குப்பதிவு செய்தது. ஆனால், அவரை இதுவரை கைதுசெய்யவில்லை என்றால், காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா அல்லது அவரை கைது செய்வதற்கு காவல்துறை பயப்படுகிறதா என்று கேள்வி எழுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்  தெரிவித்தார்.

திருநாவுக்கரசர்

தஞ்சாவூரில்  மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் கூட்டம்,  தமிழக காங்கிரஸ் கட்சியின்  தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நேற்று இரவு நடந்தது. இதில், பி.ஜே.பி-யைச் சேர்ந்த 50 பேர் அக்கட்சியில்  இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு, கட்சியின் அடையாள அட்டையை வழங்கிய பின், திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக சட்டப்பேரவையில் நீக்கம்செய்யப்பட்ட 18 உறுப்பினர்கள்குறித்து, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வர உள்ளதை வரவேற்கிறேன். இந்தத் தீர்ப்பு வந்த பிறகு நிலையான தன்மை ஏற்படும். மேலும்,  இந்த ஆட்சி கவிழ்கிறதா அல்லது நிலைபெறுமா? என்பது தெரியவரும். ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்தியிருந்தால், துப்பாக்கிச் சூடு, பொதுச் சொத்துகள் சேதம் உள்ளிட்டவற்றைத் தவிர்த்திருக்கலாம். மக்கள் போராட்டத்தை காவல் துறையைக்கொண்டு அடக்கவே நினைக்கிறது அரசு. காவல்துறையைக் கொண்டு அச்சுறுத்த முடியாது. எனவே, இதுபோன்ற போராட்டத்தைத் தொடர விடாமல், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அரசு அழைத்து பேச வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தை உச்ச நீதிமன்ற ஆணைப்படி 6 வார காலத்துக்குள் அமைத்திருந்தால், தண்ணீர் கிடைத்து, மேட்டூர் அணையை ஜூன் 12-ம் தேதி திறந்திருக்கலாம். ஆனால், கர்நாடகத் தேர்தலை மனதில்கொண்டு, மத்திய அரசு உள்நோக்கத்துடன் காலம் கடத்தியது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக மாநிலம் சார்பில் உறுப்பினர் நியமிக்கப்படாததற்கு அம்மாநில அரசும், மத்திய அரசுமே பொறுப்பு. இந்த விஷயத்தில் தமிழக அரசு வேகமாகச் செயல்பட வேண்டும். காவிரிப் பிரச்னை என்பது இரு மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்னை. இதில்,கட்சிகளை வைத்து இந்தப் பிரச்னையை அணுக முடியாது. எனவே, தமிழக அரசு போராடி, மத்திய அரசை தலையிடச்செய்து தீர்வு காண வேண்டும். என்றாலும், தமிழக விவசாயிகளின் பிரச்னைக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எப்போதும் போராடும். எஸ்.வி.சேகர் மீது தமிழகக் காவல் துறைதான் வழக்குப்பதிவு செய்தது. ஆனால், அவரைக் கைது செய்யவில்லை என்றால், காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா அல்லது காவல்துறை பயப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணியை துன்புறுத்தி, வெளியேற்றி அவமானப்படுத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 35 லட்சமாக உள்ளதை 50 லட்சமாக உயர்த்துவது, ஒவ்வொரு வாக்குச் சாவடி அளவில் குழு அமைப்பது, மக்கள் பிரச்னைக்காகப் போராடுவது ஆகியவைகுறித்து விவாதிப்பதற்காக மாவட்ட அளவில் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. இதுவரை  23-வது கூட்டம்  நடத்தப்பட்டுள்ளது'' என்று கூறினார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!