வெளியிடப்பட்ட நேரம்: 12:49 (14/06/2018)

கடைசி தொடர்பு:12:49 (14/06/2018)

`எங்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தால் முதலில் இதைத்தான் செய்வோம்’ - தங்க தமிழ்ச்செல்வன்

``நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது'' எனத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

தங்க தமிழ்ச்செல்வன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி ஆளுநரிடம் மனு அளித்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கின் இறுதித்தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இது குறித்து இன்று காலை டி.டி.வி.தினகரன் வீட்டில் 18 எம்.எல்.ஏ-க்களும் ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். சென்னை அடையாரில் உள்ள தினகரன் வீட்டுக்கு வந்திருந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18  எம்.எல்.ஏ-க்களில் ஒருவருமான தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறுகையில், “நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. எங்களுக்கு நீதிமன்றத்தின் மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளன. முதல்வரை மாற்றக் கோரி கூறியதைத் தவிர நாங்கள் வேறு எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே, நீதிமன்றம் எங்களை விடுவித்து மீண்டும் ஜனநாயகக் கடமையாற்ற அனுமதிக்க வேண்டும். எங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வரவே வராது. ஹெச்.ராஜாவுக்கு மாநில அரசின் ஆதரவும் மத்திய அரசின் ஆதரவும் உள்ளது. அதனால் அவர் என்ன கூறினாலும் யாரும் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. ஆனால், நாங்கள் ஏதேனும் சிறிய வார்த்தை கூறினால்கூட எங்கள் மீது வழக்கு பதிவு செய்துவிடுகின்றனர். நான் அ.தி.மு.க உறுப்பினர்தான். ஆனால், இன்னும் எங்களை ஏன் கட்சியிலிருந்து நீக்கவில்லை. அ.தி.மு.க எங்களிடம்தான் உள்ளது என்பதை நாங்கள் விரைவில் நிரூபிப்போம். இதில் எதிர்மறையான தீர்ப்பு வந்தால் நான் மேல்முறையீடு செய்ய மாட்டேன். எங்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தால் முதலில் எங்கள் தொகுதி மக்கள் பிரச்னைகளைச் சட்டமன்றத்துக்கு எடுத்துச் செல்வோம்” எனக் கூறினார்.