வெளியிடப்பட்ட நேரம்: 12:54 (14/06/2018)

கடைசி தொடர்பு:14:05 (14/06/2018)

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் வழக்கில் திருப்பம் - நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு #LiveUpdates

 

 

மூன்றாவது நீதிபதி யார்?

`சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது’ எனத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு அளித்தார். அதே அமர்வில் இருந்த நீதிபதி சுந்தர், `தகுதி நீக்கம் செய்ததில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாததால் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று நான் தீர்ப்பளிக்கிறேன். இந்த விவகாரத்தில் நான் தலைமை நீதிபதி கருத்தில் மாறுபடுகிறேன்’ என்றார். இந்த வழக்கில் எந்த முடிவும் எட்டப்படாததால் மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்படுகிறது. அந்த நீதிபதி யார் என்பது இனிமேல்தான் முடிவு செய்யப்படும்.  

ஒரு நீதிபதி தகுதிநீக்கம் செல்லும் என்றும் மற்றொரு நீதிபதி தகுதி நீக்கம் செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளதால் மூன்றாவது நீதிபதியிடம் இவ்வழக்கு விசாரணைக்குச் செல்கிறது. 

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் `18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லாது’ என மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி சுந்தர் தீர்ப்பு வழங்கியுள்ளார்.  

அதே சமயம் `18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும்’ எனச் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கியுள்ளார். இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். 

`தலைமை நீதிபதி சொல்வதை ஏற்க முடியாது’ என நீதிபதி சுந்தர் குறிப்பிட்டிருக்கிறார். 

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கத்தைவிட அதிகளவிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அமர்வு நீதிமன்றம் வந்தடைந்தது. 

இந்த அமர்வு மொத்தம் 7 வழக்குகளில் தீர்ப்பளிக்க உள்ளது.

முதல் வழக்காக, தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் செலவுகளை, அந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, கே.சி.பழனிச்சாமி ஆகியோரிடம் வசூலிக்க வேண்டும் என்று பா.ம.க வேட்பாளர்கள் பாஸ்கரன், குஞ்சிதபாதம் தொடர்ந்த வழக்கில் தீப்பளிக்கப்பட உள்ளது.

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடைசியில் (ஏழாவதாக)சொல்லப்பட உள்ளது

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில், இன்னும் சற்று நேரத்தில்  சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பை அளிக்கிறது. இன்று ஏழாவது வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 

இந்நிலையில், கோதண்டபாணி, ரெங்கசாமி, பார்த்திபன், பாலசுப்ரமணி, கென்னடி உள்ளிட்ட தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், தமிழக அரசியல் களம் தலைகீழானது. அ.தி.மு.க-வுக்குள் பிளவு ஏற்பட்டது. சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, தீபா அணி, தினகரன் அணி என அணிகளின் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேபோகிறது. சசிகலா சிறைக்குச் சென்றதால், அவரின் முதல்வர் கனவு தகர்ந்தது. தற்போது, எடப்பாடி பழனிசாமி, தினகரன் இடையே நேரடி மோதல் நடந்து வருகிறது. 

தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ   -க்கள் 19 பேர், அப்போதைய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். அதனால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அ.தி.மு.க கொறடா, சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரைசெய்தார்.

அதில், கடிதம் அளித்தது தொடர்பாக எம்.எல்.ஏ., ஜக்கையன் மட்டும் தனபாலிடம் விளக்கம் அளித்திருந்தார். இதையடுத்து, அவரைத் தவிர டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர், கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி  தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வின் முன்பு நடைபெற்றுவந்தது.

 

 

தினகரன் இல்லம்!

இந்த வழக்கில், இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தமிழக அரசியலில் இது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக கருதப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க