வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (14/06/2018)

கடைசி தொடர்பு:14:45 (14/06/2018)

ஹாக்கி பயிற்சியின்போது மாணவர் திடீர் மரணம்! விளையாட்டு மைதானத்தில் நடந்த சோகம்

 மாணவர்

சென்னை ஆவடியில், விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹாக்கி வீரரும் மாணவருமான வசந்தகுமார் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆவடியை அடுத்த கன்னடபாளையத்தைச் சேர்ந்தவர் ரவிகுமார், இறைச்சிக் கடை நடத்திவருகிறார். இவரின் மகன் வசந்தகுமார். இவர், அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்தார். ஹாக்கி வீரர். இவர், சமீபத்தில் மாவட்ட ஹாக்கி அணிக்கு தேர்வுசெய்யப்பட்டிருந்தார். தினமும் பள்ளி முடிந்ததும் பயிற்சியில் ஈடுபடுவதுண்டு. நேற்று மாலையும் வசந்தகுமார், ஆவடியில் உள்ள ஹாக்கி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்ததும், சக வீரர்களும் உடற்பயிற்சி ஆசிரியரும் வசந்தகுமாருக்கு முதலுதவி அளித்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், வசந்தகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

 இதையடுத்து அவரின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக, ஆவடி டேங்க் ஃபேக்டரி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

வீரர்

இதுகுறித்து வசந்தகுமாரின் உறவினர்  பூங்கோதை கூறுகையில், ``சம்பவத்தன்று பள்ளி முடிந்து மாலை நான்கு மணியளவில் ஹாக்கி பயிற்சியில் வசந்தகுமார் ஈடுபட்டுள்ளார். மைதானத்தில் அவர் மயங்கி விழுந்துவிட்டதாக எங்களுக்கு போனில் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு சென்றோம். அப்போது, அங்குள்ளவர்கள் ஹாக்கி பந்து வசந்தகுமார் மீது விழுந்ததாகக் கூறினர். அதனால்தான் அவர் இறந்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம், வலிப்பு நோயால் அவர் இறந்துவிட்டதாகச் சொல்கின்றனர். எனவே, வசந்தகுமார் எப்படி இறந்தார் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அவர், நன்றாகப் படிப்பார். சிறுவயது முதலே ஹாக்கி விளையாட்டின் மீது அதிக ஆர்வமாக இருந்தார். பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தார். ஆனால்,  விளையாட்டுப் பயிற்சியின்போதே அவர் இறந்துவிட்டார். அவரின் இழப்பை எங்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை" என்றார்

சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகம் தரப்பில் பேசியவர்கள், ``வசந்தகுமாரின் மரணம் எங்களுக்கு பெரும் இழப்புதான். அவர் எப்படி இறந்தார் என்பது பிரேதப் பரிசோதனை முடிவில்தான் தெரியும்" என்றனர்.