வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (14/06/2018)

கடைசி தொடர்பு:12:57 (14/06/2018)

`நல்லதே நடக்கும்!’ - தகுதிநீக்க வழக்கு குறித்து அமைச்சர் ஜெயக்குமார்

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரின் தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த வழக்கில் `நல்லதே நடக்கும்' என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

ஜெயக்குமார்

`தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை' என டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், அன்றைய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். இந்தக் கடிதத்தின்மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடிவெடுத்திருந்த சூழலில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்தார் எம்.எல்.ஏ ஜக்கையன். இதையடுத்து, 18 பேரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என அ.தி.மு.க கொறடா, சபாநாயகர் தனபாலிடம் கடிதம் கொடுத்தார். இதில், கடிதம் அளித்தது தொடர்பாக ஜக்கையன் மட்டும் தனபாலிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். இதையடுத்து, அவரைத் தவிர டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகரின் முடிவை எதிர்த்து, 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், இன்று மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ` டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் உள்ளது. அதனால், இதுதொடர்பாக கருத்து சொல்வது சரியாக இருக்காது. இருந்தாலும், வழக்கில் நல்லதே நடக்கும்' என்றார்.