வெளியிடப்பட்ட நேரம்: 13:49 (14/06/2018)

கடைசி தொடர்பு:13:49 (14/06/2018)

``எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டாம்!'' - ஊடகவியலாளர் லஷ்மி

டந்த ஏப்ரல் மாதம் நடந்த அந்தச் செய்தியாளர் சந்திப்பை யாரும் மறந்திருக்க முடியாது. சர்ச்சைக்குரிய நிர்மலா தேவி விஷயம் தொடர்பாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நடத்திய செய்தியாளர் சந்திப்பு. அப்போது, நிருபர் லஷ்மி சுப்ரமணியன் கேட்ட கேள்விக்கு முறையான பதில் அளிக்காமல், அவர் கன்னத்தைத் தட்டிவிட்டு நகர்ந்தார் கவர்னர்.

லஷ்மி

இதையடுத்து, 'என் அனுமதியில்லாமல் கன்னத்தில் தட்டியது எனக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அது முறையற்றது' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கோபத்தை வெளிப்படுத்தினார் லஷ்மி. 'ஒரு தாத்தா தன் பேத்தியை ஆசிர்வதிப்பதுபோல கன்னத்தில் தட்டினார்' என்று, தமிழிசை செளந்திரராஜன் உள்ளிட்ட பா.ஜ.க-வினர் இந்தப் பிரச்னைக்கு முட்டுக்கொடுத்தனர். இதன் தொடர்ச்சியாக, நடிகர் எஸ்.வி.சேகர் தன் முகநூல் பக்கத்தில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றித் தரக்குறைவான கருத்தைப் பதிவிட, தமிழ்நாடே கொதித்தது. அது, பத்திரிகையாளர்களை மட்டுமின்றி, வேலைக்குச் செல்லும் ஒட்டுமொத்த பெண்களையுமே கேவலப்படுத்துவது போன்று இருந்தது. இதையடுத்து, 'அந்தக் கருத்து என்னுடையதல்ல. வேறொருவர் எழுதியதைப் படித்துப் பார்க்காமல் ஷேர் செய்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்' என்று வீடியோ வெளியிட்டார் எஸ்.வி.சேகர்.
 
ஆனாலும், 'பெண்களைத் தரக்குறைவாக விமர்சித்தது உள்ளிட்ட சில பிரிவின் கீழ், எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டும்' என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 'தலைமறை'வான எஸ்.வி.சேகரை இன்னமும் தேடிக்கொண்டிருப்பதாக சொன்னது காவல்துறை. நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு கேள்வி எழுப்பிவிட்டது. அவரோ, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பல்வேறு நிகழ்வுகளில் நகர்வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில், நிருபர் லஷ்மியிடம் பேசினோம்.

``இந்தப் பிரச்னையே என்னை வைத்துத்தான் ஆரம்பித்தது. 'அந்த நிருபர் பெண்ணைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது' என்றுதான் எஸ்.வி.சேகர் அந்த போஸ்ட்டில் சொல்லியிருப்பார். ஆரம்பத்திலிருந்தே இந்தப் பிரச்னையில் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. காரணம், அவர் ஆரம்பத்திலிருந்தே, 'நான் இன்னொருத்தர் போஸ்ட்டைத்தானே ஷேர் செய்திருந்தேன். அதைத்தான் நீக்கிட்டேனே. அதுக்காக வருத்தமும் தெரிவிச்சுட்டேனே' என்று அலட்சியமாகவே இருந்தார். தனக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. நான் இருக்கிறபடியே இருப்பேன் என்கிற அவருடைய மனவோட்டம் நன்றாகவே தெரிந்தது.


    எஸ்.வி.சேகர்

எஸ்.வி.சேகர் பிரச்னையில் நான் தனிப்பட்ட முறையிலும் காவல்துறையில் புகார் அளித்திருந்தேன். என்னுடைய புகாரை வாங்கிக்கொண்டார்களே தவிர, அதற்கான அக்னாலெட்ஜ்மென்ட்கூட எனக்குத் தரப்படவில்லை. ஜர்னலிஸ்ட் யூனியன் தந்த புகாரின் கீழ்தான் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கையே எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் அவர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டபோது, ஜர்னலிஸ்ட் யூனியனுடன் பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். அந்த அளவுக்கு அந்த போஸ்ட்டில் பெண் பத்திரிகையாளர்களை இழிவாகக் குறிப்பிட்டிருந்தார். அதனால்தான், அவர் வாய்வழியாகக் கூறிய மன்னிப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளாமல் போராடிக்கொண்டிருக்கிறோம்.

 தற்போது, காவல்துறையினர் 'நாங்கள் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டோம்' என்கிறார்கள். அதாவது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்ட பிறகு அரெஸ்ட் போன்ற நடவடிக்கையோ, விசாரணையோ நடைபெறாது என்பதையே இது காட்டுகிறது. பெண் பத்திரிகையாளர்களை மட்டுமின்றி, சக மனிதர்களை தன் அதிகாரத்துக்கும் தன் சாதிக்கும் கீழாக நினைப்பது எவ்வளவு தவறான விஷயம். இதைத்தான் அவர் செய்துவருகிறார்'' என்றவர், அடுத்துச் சொன்ன விஷயம்தான் முக்கியம்...

``என்னைக் கேட்டால், எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் இருப்பதே நல்லது என்பேன். அப்படிச் செய்து அவரைப் பெரிய ஆளாக உருவாக்கிவிட வேண்டாம். அவர் நாடக நடிகராக மட்டுமே இருந்துவிட்டுப் போகட்டும். அவரைப் பெரிய ஆளாக்கி, அரசியல்வாதி ஆக்கிவிட வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன். அவரைப் போன்ற அரசியல்வாதிகள் நமக்குத் தேவையே இல்லை. அவர் நாடக நடிகராக இருக்கட்டும் அல்லது வீட்டிலேயே இருக்கட்டும். சக மனிதர்களை தனக்குக் கீழாக நினைப்பவர்கள் வீட்டுக்குள் இருப்பதே சமூக சமத்துவத்துக்கு நல்லது'' என்று ஆவேசமும் ஆதங்கமுமாக முடித்தார் லஷ்மி.


டிரெண்டிங் @ விகடன்