வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (14/06/2018)

கடைசி தொடர்பு:16:38 (14/06/2018)

ரஷ்ய பெண்களுக்கு பெண் எம்.பி. எச்சரிக்கை

ரஷ்ய பெண்களுக்கு அந்நாட்டு பெண் எம்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்ய பெண்களுக்கு பெண் எம்.பி. எச்சரிக்கை

ஷ்யாவில் 1980- ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடந்தபோது ஏராளமான ரஷ்யப் பெண்கள் வெளிநாட்டவர்கள் வலையில் விழுந்தனர். வெளிநாட்டவர்களுடன் டேட்டிங் சென்றதில் கர்ப்பமும் அடைந்தனர். ஒலிம்பிக் போட்டி முடிந்தவுடன்  ரசிகர்கள் கடமை முடிந்து  அவரவர் நாடு போய்  சேர, ரஷ்ய பெண்கள் 'சிங்கிள் மதர்' நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஒலிம்பிக் போலவே பிரமாண்டமான உலகக் கோப்பை கால்பந்து தொடர் முதன்முறையாக ரஷ்யாவில் நடைபெறுகிறது.  

ரஷ்யா பெண்களுக்கு எச்சரிக்கை

ஒலிம்பிக் போட்டியாவது ஒரு நகரத்தில் நடைபெறும். உலகக் கோப்பை கால்பந்து போட்டி 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெறவுள்ளது. பல நாட்டு ரசிகர்களும் பல நகரங்களை முற்றுகையிடுவார்கள். அமெரிக்க அணி நடப்பு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. எனினும், உலகக் கோப்பை தொடரை காண 88,000 அமெரிக்க ரசிகர்கள் ரஷ்யா செல்கின்றனர். இந்நிலையில், ரஷ்ய கீழ் அவை பெண் எம்.பியும் கம்யூனிஸ்ட் தலைவருமான டமாரா ப்ளேட்டன்யாவா , 'ரஷ்ய பெண்கள் வெளிநாட்டவர்களுடன் உடல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ளக் கூடாது' என்று எச்சரித்துள்ளார். 

மாஸ்கோ ரேடியோ நிலையம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ,``ஒலிம்பிக் போட்டி முடிந்த பின்னர் ஆப்ரிக்கா, அமெரிக்கா, லத்வியா, ஆசிய இன கலப்பில் ரஷ்யாவில் ஏராளமான  குழந்தைகள் பிறந்தன. பல குழந்தைகள் கைவிடப்பட்டன. இதனால், குழந்தைகள்தான் பாதிப்புக்குள்ளாகின்றனர். சிங்கிள் மதர் உருவாகிறார்கள் '' என்று குற்றம் சாட்டியுள்ளார். 'உலகக் கோப்பை வாயிலாக ரஷ்யாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிக்கும்' என்று ரஷ்ய அதிபர் புதின் நம்பிக்கை தெரிவித்தாரே.. என்கிற கேள்விக்கு 'கலப்பின குழந்தைகள் பிறக்க வேண்டாம். நம் இன குழந்தைகள் பிறப்பதுதான் ரஷ்யாவுக்கு நல்லது' என்று டமாரா பதில் அளித்தார்.  

ரஷ்ய பெண்கள் வெளிநாட்டவரை திருமணம் முடித்தாலும், உறவு விரிசலில்தான் முடிகிறது என்றும் டமாரா குறிப்பிட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க